கோவாவில் உள்ள கேளிக்கை விடுதியில் சிலிண்டர்கள் வெடித்து பயங்கரம்: 25 பேர் உயிரிழப்பு – நடந்தது என்ன?
கோவாவில் உள்ள கேளிக்கை விடுதியில் காஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் சமையல் ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 50 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அதில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கோவாவின் அர்போரா பகுதியில் ‘பிர்ச் பை ரோமியோ லேன்’ என்ற கேளிக்கை விடுதி உள்ளது. சுமார் 1.15 ஏக்கர் பரப்பளவில் ஓட்டல், மதுபான பார், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இங்கு உள்ளன. தினமும் இரவு நேரத்தில் இன்னிசை கச்சேரி, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஒரு நபருக்கு ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அங்குள்ள மதுபான விடுதியில் ஒரு மேஜையை முன்பதிவு செய்ய ரூ.10,000 வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
இந்த கேளிக்கை விடுதியில் வழக்கம்போல சனிக்கிழமை இரவு ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. நள்ளிரவில் மெல்லிசைக் குழுவினர் பாலிவுட் பாடல்களை இசைக்க, இளம்பெண் ஒருவர் நடனமாடிக் கொண்டிருந்தார். சுற்றுலா பயணிகள் உட்பட ஏராளமான பார்வையாளர்கள் நிகழ்ச்சிகளை ரசித்தபடி இருந்தனர்.
நள்ளிரவு 12 மணி அளவில் விடுதியின் சமையல் கூடத்தில் காஸ் சிலிண்டர்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறி தீ விபத்து ஏற்பட்டது. மேற்கூரையில் தீ பரவுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இசைக் குழுவினர், நடனப் பெண், பார்வையாளர்கள் சிதறி ஓடினர். விடுதியின் பல்வேறு பகுதிகளில் இருந்தவர்களும் நுழைவுவாயிலை நோக்கி பீதியுடன் ஓடினர்.
நுழைவுவாயில்கள் குறுகலாக இருந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதற்குள், விடுதி முழுவதும் தீ பரவி வானளாவிய உயரத்துக்கு கொழுந்துவிட்டு எரிந்தது. இதில், விடுதி ஊழியர்கள் 14 பேர் உட்பட 25 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் விரைந்து வந்து, தீ விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘அரை மணி நேரத்துக்குள் தீ அணைக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு உயர்தரமான சிகிச்சை அளிக்கப்படும். விபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உட்பட பல்வேறு தலைவர்களும் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். கோவா முதல்வர் பிரமோத் சாவந்தை பிரதமர் மோடி நேற்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தீ விபத்து குறித்து கேட்டறிந்தார்.
இதை தொடர்ந்து, பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘கோவாவின் அர்போராவில் ஏற்பட்ட தீ விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கி வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
தீ விபத்து நிகழ்ந்த பிர்ச் பை ரோமியோ லேன் கேளிக்கை விடுதியில் தரைக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள சுரங்க அறைகளில் சமையல் கூடம் செயல்பட்டு வந்துள்ளது. எதிர்பாராதவிதமாக அங்குள்ள காஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதில், சமையல் கூடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்.
மேஜை, நாற்காலிகள் மற்றும் விடுதியின் மேற்கூரை ஆகியவை மரத்தால் அமைக்கப்பட்டவை என்பதால், தீ வேகமாக பரவி, கரும் புகை சூழ்ந்தது. இதில் பலர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். தீவுப் பகுதியில் உள்ள கேளிக்கை விடுதிக்குச் செல்லும் பாதை குறுகலாக உள்ளது. இந்த பாதையில் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாது. இதனால், சுமார் 400 மீட்டர் தொலைவிலேயே தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அங்கிருந்தே தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. விடுதியில் போதிய தீயணைப்பு வசதிகள் இல்லாததாலும், நுழைவுவாயில்கள் குறுகலாக இருந்ததாலும் அதிக உயிரிழப்பு நேரிட்டுள்ளது என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
4 மேலாளர்கள் கைது: கேளிக்கை விடுதியின் பொது மேலாளர் மற்றும் ஓட்டல், மதுபான பார், நுழைவுவாயில் பிரிவுகளின் மேலாளர்கள் கைது செய்யப்பட்டனர். விடுதி உரிமையாளர்கள் கவுரவ் லூத்ரா, சவுரப் லூத்ரா தலைமறைவாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் ரோஷன், விதிகளை மீறி கேளிக்கை விடுதிக்கு பல்வேறு அனுமதிகளை வழங்கியதாக கூறப்படுகிறது. அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.