;
Athirady Tamil News

டிரம்ப்புக்கு போட்டியாக எலான் மஸ்க்! அமெரிக்காவுக்கு விடுதலையா?

0

அமெரிக்காவில் புதிய கட்சி ஒன்றை எலான் மஸ்க் தொடங்கியதாக அறிவித்தார்.

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அரசு கொண்டுவந்த செலவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எலான் மஸ்க், அமெரிக்காவை ஊழல் மற்றும் வீண் செலவு மூலம் திவாலாக்க முயற்சிக்கும் ஒரு கட்சி அரசியலின் ஆட்சியில்தான் நாம் இருக்கிறோம்; ஜனநாயக ஆட்சியில் நாம் இல்லை என்று விமர்சித்தார்.

தொடர்ந்து, அமெரிக்கர்களுக்கு சுதந்திரத்தைக் கொடுப்பதற்காக அமெரிக்கா கட்சி தொடங்கப்பட்டதாகவும் அறிவித்தார்.

ஜூலை 4 ஆம் தேதியில் “உங்களுக்கு விடுதலை வேண்டுமா? அமெரிக்கன் பார்ட்டி தொடங்கலாமா?’’ என்று மக்களிடம் கேள்வி எழுப்பினார். எலான் மஸ்க்கின் கேள்விக்கு சாதகமாக, 65.4 சதவிகிதத்தினர் `ஆம்’ என்று பதிலளித்தனர்.

அமெரிக்க அரசு கொண்டுவந்த வரி மற்றும் செலவு மசோதாவால், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் டெஸ்லா நிறுவனரும் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக (முன்னொரு காலத்தில்) இருந்தவருமான எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது.

ஒன் பிக் அன்ட் பியூட்டிஃபுல் பில் என்ற செலவு மசோதாவை டிரம்ப் கொண்டுவர முயன்றபோது, அதனை ஏற்க மறுத்த எலான் மஸ்க், இந்த மசோதாவால் நாட்டின் கடன் அதிகரிக்கும் என்றும் எச்சரித்தார். மேலும், மசோதாவை ஆதரிப்பது தவறு என்று குடியரசுக் கட்சி உறுப்பினர்களையும் கேட்டுக் கொண்டார்.

ஆனால், டிரம்ப் கூறும் மசோதாவால், அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் கடன் 3.4 டிரில்லியன் டாலர்வரை (சுமார் ரூ. 2,90,70,527 கோடிகள்) அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுநர்களும் கூறுகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, டிரம்ப்பும் மஸ்க்கும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி, பொதுவெளியிலேயே (சமூக ஊடகங்களில்) சண்டையிட்டனர். அதுமட்டுமின்றி, மசோதா அமல்படுத்தப்பட்டால், தான் புதிய கட்சி தொடங்குவேன் என்று எலான் மஸ்க் கூறினார்.

இதனிடையே, 80 சதவிகித நடுத்தர மக்களை பிரதிநிதித்துவப்படுத்த புதிய கட்சி தேவையா? என்று எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் கருத்துக் கணிப்பு நடத்தினார்.

இந்தக் கருத்துக் கணிப்புக்கு 80 சதவிகிதத்தினர் (56.30 லட்சம் பேர்) `ஆம்’ என்று பதிலளித்தனர். அமெரிக்க மக்களின் இந்த பதில், சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியது.

எலான் மஸ்க் கட்சி தொடங்குவது ஒருபுறம் இருந்தாலும், அமெரிக்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியை வீழ்த்துவதற்காகவே, எலான் மஸ்க்கை வைத்து புதிய கட்சியை டிரம்ப்பும் சேர்ந்து திட்டமிட்டு தொடங்கியிருக்கலாம் என்று இணையவாசிகள் யூகிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.