;
Athirady Tamil News

அருகம் குடாவில் இஸ்ரேலியர்கள் பிரசன்னம் குறித்து பொலிஸாரின் அறிவிப்பு

0

அருகம் குடாவில் இஸ்ரேலியர்களின் பிரசன்னம் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அருகம் குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அவர்கள் ஈடுபடும் வணிக நடவடிக்கைகள் குறித்து அண்மையில் கடும் விமர்சனங்கள் எழுப்பபட்டிருந்தன.

சட்டத்தை மீறாத எந்தவொரு வெளிநாட்டவரின் இருப்பு குறித்தும் கரிசனையாக நோக்கப்பட வேண்டியதில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அனைத்து தேசிய இனங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளையும் வரவேற்பதாகவும், இலங்கை ஒரு விரும்பத்தக்க சுற்றுலா தலமாக இருப்பதில் பெருமை கொள்ள வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

அருகம் குடாவோ அல்லது வேறு எந்தப் பகுதியோ, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையை தேர்ந்தெடுப்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்ல அறிகுறியாக பார்க்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அருகம் குடாவில் இஸ்ரேலிய பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனியர்கள் அல்லது வேறு எந்த நாட்டவர்கள் இலங்கைக்கு வந்தாலும், அவர்கள் நம் நாட்டின் அழகை அனுபவிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.

நாம் நம் நாட்டைப் பற்றி பெருமைப்பட வேண்டும். வெளிநாட்டவர்கள் வருகை தருவது இலங்கையின் நன்மைக்கே. இது ஒரு பிரச்சினையாக ஏன் பார்க்கப்படுகிறது என்பது எனக்கு புரியவில்லை. நம் நாடு வளர்ந்து உயர வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளையில், இலங்கை பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகள் உட்பட பாதுகாப்பு படைகள் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள எப்போதும் விழிப்புடன் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வூட்லர் உறுதியளித்துள்ளார்.

பொலிஸ், முப்படைகள் மற்றும் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். பிரச்சினை ஏற்படும்போது அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

. அருகம் குடாவில் இஸ்ரேலியர்களின் பிரசன்னம் மற்றும் வணிக நடவடிக்கைகள் தொடர்பில் அண்மையில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.