;
Athirady Tamil News

காஸாவில் மக்கள் தஞ்சமடைந்த முகாம்களின் மீது இஸ்ரேல் தாக்குதல்: 16 பேர் பலி

0

காஸாவில், பாலஸ்தீனர்கள் தஞ்சமடைந்த பள்ளிக்கூடம், அகதிகள் முகாம்கள் ஆகியவற்றின் மீது நேற்று (அக். 1) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

காஸாவின் ஜெய்டொன் பகுதியில் உள்ள அல் – ஃபலா பள்ளிக்கூடத்தில், தாக்குதல்களில் இருந்து உயிர்பிழைத்த மக்கள் தஞ்சமடைந்திருந்தனர். இந்த நிலையில், அந்தப் பள்ளிக்கூடத்தின் மீது இன்று அதிகாலை, இஸ்ரேல் ராணுவம் 2 முறை வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதையடுத்து, காஸாவின் மேற்கு பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீருக்காகத் திரண்டிருந்த பாலஸ்தீனர்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்துடன், நுசைராத் மற்றும் புரேஜ் அகதிகள் முகாம்களின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்களில், இன்று அதிகாலையில் மட்டும் 16 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காஸாவில் நேற்று முன்தினம் (செப். 30) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் யஹ்யா பர்சாக் எனும் பத்திரிகையாளர் கொல்லப்பட்டார்.

ஆனால், இந்தத் தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் ராணுவம் தரப்பில் இருந்து எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் காஸா மீதான இஸ்ரேலின் போரில் 66,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 1,70,000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள காஸாவுக்கான அமைதித் திட்டத்திற்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரவளித்துள்ளார்.

ஹமாஸ் கிளர்ச்சிப்படை சரணடைய வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய நிபந்தனைகள் மற்றும் அம்சங்களுடன் கூடிய அந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் தலைவர்கள் விரைவில் பதிலளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.