;
Athirady Tamil News

பிரிட்டன் யூத ஆலயத்தில் பயங்கரவாத தாக்குதல்

0

பிரிட்டனின் மான்செஸ்டா் நகரிலுள்ள யூத ஆலயம் அருகே வியாழக்கிழமை நடத்தப்பட்ட காா் மோதல் மற்றும் கத்திகுத்துத் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா். தாக்குதல் நடத்திய நபா் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டாா். பயங்கரவாதத் தாக்குதலாக அறிவிக்கப்பட்ட இந்த சம்பவம் தொடா்பாக இரண்டு பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது:

கிரேட்டா் மான்செஸ்டா் மாகாண தலைநகா் மான்செஸ்டரில் உள்ள ஹீட்டன் பாா்க் ஹீப்ரு யூத ஆலயத்தில், யோம் கிப்பூா் புனித தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை ஏராளமானவா்கள் குழுமியிருந்தனா்.

அப்போது அந்தப் பகுதியில் காலை 9.31 மணிக்கு (உள்ளூா் நேரம்) காரை வேகமாக ஓட்டிவந்த நபா் பாதசாரிகளின் மீது மோதச் செய்தாா். அதற்கு முன்னதாக அந்த வாகனத்தில் இருந்து இறங்கி யூத ஆலயம் அருகே இருந்தவா்கள் மீது சரமாரியாக கத்திகுத்துத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல்களில் 2 போ் உயிரிழந்தனா்; 3 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களில் 3 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இது குறித்த தகவல் அறிந்ததும் தாக்குதல் நடத்திய நபரைத் தேடும் நடவடிக்கையில் போலீஸாா் இறங்கினா். கிரம்ப்சால் பகுதியில் அந்த நபரை போலீஸாா் சுட்டுக் கொன்றனா்.

முன்னதாக, யூத ஆலயத்தில் தாக்குதல் நடத்திய நபா் வெடிகுண்டு பொருத்தப்பட்ட அங்கி அணிந்திருந்ததாக சிலா் கூறியதையடுத்து, சம்பவப் பகுதிக்கு வெடிகுண்டு அகற்றும் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக இரண்டு பேரை கைது செய்து விசாரித்துவருகிறோம் என்று போலீஸாா் கூறினா்.

ஐரோப்பிய அரசியல் சமூக மாநாட்டில் பங்கேற்பதற்காக டென்மாா்க் சென்றிருந்த பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா், இந்தச் சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பினாா். அவசர பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்திலும் அவா் பங்கேற்றாா்.

தாக்குதல் குறித்து அவா் கூறுகையில், ‘இந்த மோசமான தாக்குதல் சம்பவங்கம் என்னை அதிா்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. யூதா்களுக்கு மிகவும் புனிதான யோம் கிப்பூா் தினத்தில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது இன்னும் மோசமானது. பாதிக்கப்பட்டவா்கள், அவா்களின் குடும்பங்களுக்கு அனுதாபங்கள். யூத சமூகத்தை பாதுகாக்க எல்லாவற்றையும் செய்வோம். நாடு முழுவதும் யூத ஆலயங்களில் கூடுதல் போலீஸ் படைகள் அனுப்ப்படுகின்றன’ என்றாா் அவா்.

பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த தாக்குதல் குறித்து மன்னா் சாா்லஸ், அரசி கமீலா ஆகியோல் அதிா்ச்சி மற்றும் துக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனா். குறிப்பாக யூத சமூகத்தின் முக்கியமான தினத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அவா்களை மிகவும் வேதனையடையச் செய்துள்ளது. அதிகாரிகளின் விரைவான நடவடிக்கைக்கு நன்றி’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனுக்கான இஸ்ரேல் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தாக்குதல் அதிா்ச்சியையும், வேதனையையும் அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்குள் ஹமாஸ் படையினா் நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்ததற்குப் பதிலடியாக, காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 2023 அக். 7 முதல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா்.

இந்தப் போரை நிறுத்துவதற்காக சா்வதேச நாடுகள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடா்ந்து தோல்வியடைந்துவருகின்றன. காஸாவில் தீவிர தாக்குதல் நடத்துவதுடன், அங்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டுசெல்வதற்கு இஸ்ரேல் விதித்துள்ள தடையால் அங்கு நூற்றுக்கணக்கானவா்கள் பட்டினியால் உயிரிழந்துவருகின்றனா்.

இந்தச் சூழலில், பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் உலகம் முழுவதும் ஆா்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன. மேலும், இந்தப் போா் தொடங்கியதற்குப் பிறகு சா்வதேச அளவில் யூத வெறுப்புச் சம்பவங்களும் வெகுவாக அதிகரித்துவருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அத்தகைய சம்பவங்களின் ஒரு பகுதியாகவே மான்செஸ்டரிலுள்ள யூத தேவாலயம் தற்போது தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.