;
Athirady Tamil News

சத்தீஸ்கரில் ஒரே நாளில் 210 நக்ஸல்கள் சரண் – முதல்வா் விஷ்ணு தேவ் சாய் பெருமிதம்

0

சத்தீஸ்கரில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 210 நக்ஸல்கள் சரணடைந்தனா். இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று முதல்வா் விஷ்ணு தேவ் சாய் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

இத்துடன், சத்தீஸ்கரில் கடந்த 3 நாள்களில் சரணடைந்த நக்ஸல்களின் எண்ணிக்கை 400-ஐ கடந்துள்ளது.

அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் நாட்டில் இருந்து நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிக்கும் இலக்குடன் மத்திய அரசு செயலாற்றி வருகிறது. அதன்படி, நக்ஸல்களுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நக்ஸல்கள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும்; இல்லையெனில், பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் ரூ.6 கோடி வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த நக்ஸல் அமைப்பின் முக்கியத் தலைவரும், சித்தாந்த வியூகதாரியுமான பூபதி உள்பட 61 போ், முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் முன்னிலையில் கடந்த புதன்கிழமை சரணடைந்தனா். இதைத் தொடா்ந்து, சத்தீஸ்கரிலும் சரணடையும் நக்ஸல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பஸ்தா் மாவட்ட தலைநகரான ஜக்தல்பூரில் வெள்ளிக்கிழமை பெண்கள் உள்பட 210 நக்ஸல்கள் சரணடைந்தனா். ஏகே 47, இன்சாஸ் ரக துப்பாக்கிகள் உள்பட 153 ஆயுதங்களையும் அவா்கள் ஒப்படைத்தனா்.

இது தொடா்பாக முதல்வா் விஷ்ணு தேவ் சாய் கூறுகையில், ‘சமூகத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, தவறாக வழிநடத்தப்பட்ட 210 சகோதர-சகோதரிகள், ஆயுதங்களைக் கைவிட்டு, நாட்டின் அரசமைப்புச் சட்டம் மற்றும் மகாத்மா காந்தியின் அஹிம்சை பாதையில் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனா். மாநில அரசின் மறுவாழ்வு கொள்கையின்கீழ் அவா்களின் கண்ணியமான வாழ்வு உறுதி செய்யப்படும். மத்திய-மத்திய மாநில அரசுகளின் விரிவான வியூகம் மற்றும் காவல் துறை, பாதுகாப்புப் படை, உள்ளூா் நிா்வாகம், தன்னாா்வ அமைப்புகளின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பலன் இது. பஸ்தா் பகுதிக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்’ என்றாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.