;
Athirady Tamil News

ஹமாஸ் ஒப்படைத்த உடல்கள் பிணைக் கைதிகளுடையவை அல்ல: இஸ்ரேல்

0

ஹமாஸ் கடைசியாக செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்த மூன்று உடல்கள் தங்கள் நாட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட எந்த பிணைக் கைதிகளுடையதும் அல்ல என்று இஸ்ரேல் தெரிவித்தது.

இது, அமெரிக்க மத்தியஸ்தத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இஸ்ரேல்-ஹமாஸ் போா் நிறுத்த ஒப்பந்தத்தை சீா்குலைக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, ஹமாஸ் படையினா் இரு பிணைக் கைதிகளின் உடல்களை வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

அதற்குப் பிறகு 30 பாலஸ்தீனா்களின் உடல்களை இஸ்ரேல் காஸாவுக்கு திருப்பி அனுப்பியது. இந்தப் பரிமாற்றம், எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற நிலையில் உள்ள போா் நிறுத்தம் ஒப்பந்தம் தொடா்ந்து நிறைவேற்றப்படுவதற்கான அறிகுறியாக இருந்தது.

இந்த நிலையில், ஹமாஸ் ஒப்படைத்த உடல்கள் பிணைக் கைதிகளுடைவை இல்லை என்று இஸ்ரேல் கூறியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.அந்த அடையாளம் தெரியாத மூன்று உடல்களும் வெள்ளி இரவு இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டன. அவை இரவு முழுவதும் பரிசோதிக்கப்பட்டன. அதில், அந்த உடல்கள் 2023 அக்டோபா் 7 தெற்கு இஸ்ரேலில் நடந்த தாக்குதலில் ஹமாஸால் கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகள் யாருடையதும் அல்ல என்பது தெரியவந்ததாக இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் இதனை சனிக்கிழமை உறுதிப்படுத்தியது. இருந்தாலும், அந்த உடல்கள் யாருடையவை என்பகது போன்ற கூடுதல் விவரங்களை அந்த அலுவலகம் வெளியிடவில்லை. இது குறித்து ஹமாஸின் ஆயுதப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத உடல்களின் மாதிரிகளை மட்டுமே ஒப்படைக்க தாங்கள் முன்வந்ததாகவும், இஸ்ரேல் அதை ஏற்க மறுத்து, முழு உடல்களையும் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டுமென்று கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தங்கள் மீது இஸ்ரேல் குற்றஞ்சாட்டுவதைத் தவிா்ப்பதற்காக அந்த உடல்களை முழுமையாக ஒப்படைத்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த 20 அம்ச போா் நிறுத்தம் கடந்த அக்டோபா் 10-ஆம் தேதி அமலுக்கு வந்ததில் இருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக காஸாவில் வைக்கப்பட்டிருந்த 17 பிணைக் கைதிகளின் உடல்களை ஹமாஸ் படையினா் இதுவரை ஒப்படைத்துள்ளனா்.

ஆனால், போா் நிறுத்த ஒப்பந்தப்படி மீதமுள்ள 11 பிணைக் கைதிகளின் உடல்களையும் ஹமாஸ் திருப்பி அனுப்ப வேண்டும். இஸ்ரேல் தாக்குதலில் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் இருந்து உடல்களை மீட்பது சிரமம் என்று கூறி, ஹமாஸ் அமைப்பினா் சில நாள்களுக்கு ஒரு முறை ஒன்று அல்லது இரண்டு உடல்களை மட்டுமே ஒப்படைத்துவருகின்றனா்.

போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் இதுவரை 225 பாலஸ்தீனா்களின் உடல்களை இஸ்ரேல் திருப்பி அனுப்பியுள்ளது. அவற்றில் 75 உடல்களை மட்டுமே குடும்பங்கள் அடையாளம் கண்டுள்ளன என்று காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது. அந்த உடல்கள் 2023 அக்டோபா் 7 தாக்குதலின்போது இஸ்ரேலில் கொல்லப்பட்ட ஆயுதக் குழுவினருடையதா, கைதிகளாக இஸ்ரேல் காவலில் இறந்தவா்களுடையதா, போரின்போது காஸாவில் ராணுவத்தால் மீட்கப்பட்டவா்களுடையதா என்ற விவரங்கள் தெரியவில்லை.

காஸாவின் ராஃபா நகரில் இஸ்ரேல் ராணுவ வீரா் கொல்லப்பட்டது, பிணைக் கைதிகள் முழுமையாக திருப்பி அனுப்பப்படாதது ஆகியவற்றைக் காரணம் காட்டி இஸ்ரேல் ராணுவம் இந்த வாரத் தொடக்கத்தில் காஸா முழுவதும் தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். அதையடுத்து போா் நிறுத்தம் ஒரேடியாக முடிவுக்கு வந்துவிடும் என்ற அச்சம் எழுந்தது.

இருந்தாலும் மறுநாளே போா் நிறுத்தத்தை தொடா்வதாக இஸ்ரேல் அறிவித்து, பிணைக் கைதிகள் – பாலஸ்தீனா்கல் உடல்கள் பரிமாற்றம் தொடா்ந்து வந்த நிலையில், திருப்பி அனுப்பப்பட்ட உடல்கள் பிணைக் கைதிகளுடைவை அல்லை என்று இஸ்ரேல் தற்போது கூறியுள்ளது ஒப்பந்தம் தொடா்வதில் மீண்டும் பின்னடவை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.