இந்தியாவின் உதவிக்கு துணைத் தூதுவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள்
யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியை தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் துணைத் தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
சூறாவளி, வெள்ளப்பெருக்கு காரணமாக வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக குறித்த சந்திப்பு நடைபெற்றதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
சந்திப்பு தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சுரேஷ் பிரேமசந்திரன் கருத்து தெரிவிக்கும் போது,
வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் அதற்கு எவ்வாறான நிவாரணங்களை கொடுப்பது பற்றியும் முல்லைத்தீவு மன்னாரில் ஏற்பட்டுள்ள மிகப் பாரதூரமான இழப்புக்களுக்கு உடனடியாக என்ன செய்வது என்பது தொடர்பாகவும் இரண்டாவது கட்டமாக என்ன செய்வது என பல விடயங்களை ஆலோசித்து இருந்தோம்.
வடக்கு மாகாண மக்களின் தேவைகளை உள்ளடக்கிய கோரிக்கை கடிதத்தையும் சமர்ப்பித்ததுடன் அதன் பிரகாரம் வடகிழக்கு மாகாணங்களை எதிர்காலத்தில் எவ்வாறு பாரிய பாதிப்புகள் வருவதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாகவும் இப்போதுள்ள நிலைமைகளை சீர் செய்வது
தொடர்பாகவும் பேசியிருந்தோம்.
இந்த அனத்தம் ஏற்பட்ட பின்னர் இந்திய அரசினால் கொழும்பு ஊடாகவும் திருகோணமலை ஊடாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் கொண்டுவரப்பட்டமைக்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்தோம்.
விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த மாதங்களில் நிச்சயமாக பொருளாதார பின்னடைவை சந்திக்கவிருக்கிறோம். வடக்கில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் இறந்திருக்கிறது. அதனுடைய முழுமையான விபரங்கள் இதுவரை தெரியாது. அந்த விவசாயிகள், பண்ணையாளர்களுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது. இதனை மீள உருவாக்குவதற்கான வேலை திட்டங்களை செய்ய வேண்டும்.
வன்னி மக்கள் இத்தனை வருடத்தில் பல இடப்பெயர்வுகளை சந்தித்தவர்கள். இந்த நிலையில் அவர்கள் மீண்டும் மீண்டும் இடப்பெயர்வுக்கு உள்ளாகுவது என்பது ஒரு பெரிய ஒரு சுமை. அவர்களுக்கு உதவுவதற்கு இந்திய செயல்பட வேண்டும். அதற்கு இந்தியா முன் வந்திருக்கிறது. தமிழகத்தினுடைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தாங்களும் உதவி செய்வதற்கு தயாராக இருப்பதாக கூறி இருப்பதால் ஈழத் தமிழர் சார்பாக நாங்கள் அதற்கு வரவேற்கிறோம்.
32,000 கோடிக்கு மேல் இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என அரசாங்கம் தெரிவிக்கிறது. வீதிகள் பாலங்கள் மோசமாக பாதிக்கப்பட்டது.
இந்தியா எல்லோருக்கும் முன்பாக நட்பு நாடாக எமக்கு உதவி செய்திருக்கிறது. அதற்கு நன்றி சொன்னதுடன் மேற்கொண்டு செய்ய வேண்டிய நடவடிக்கை தொடர்பாக பேசியிருக்கிறோம் -என்றார்.