கிளிநொச்சியில் 1000 குடும்பங்களுக்கு இலவச நீர் இணைப்பு: World Vision நிறுவனத்தின் பாரிய நிதியுதவி!
;
சுத்தமான குடிநீர்ப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதற்கான இச் செயற்திட்டத்திற்கான ஆரம்பக் கட்ட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் தலைமையில் 06.03.2026 திகதி அன்று நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் வடமாகாண தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் மற்றும் World Vision நிறுவன கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு நீர் விநியோக திட்டம் தொடர்பான கருத்துக்களை முன்வைத்தனர்.
குறிப்பாக சுத்தமான குடிநீரை பெறுவதில் வறிய குடும்பங்கள் எதிர் கொண்ட சவாலை வெற்றி கொள்வதற்கான வாய்ப்பாக இத் திட்டம் அமைந்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் முதற்கட்டமாக 700 குடும்பங்களுக்கு வழங்கும் செயற்திட்டத்தின் தொடர்ச்சியாக ஸ்கந்தபுரம்,கிருஸ்ணபுரம், ஊற்றுக்குளம், அம்பாள் குளம், அம்பாள் நகர் மற்றும் புதுமுறிப்பு ஆகிய கிராமங்களுக்கு இத்திட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளது.
நீர் இணைப்பை பெற்றுக்கொண்ட குடும்பங்கள் மாதாந்த கட்டணத்தை செலுத்த வேண்டுமெனவும் , குறிப்பாக நீர் இணைப்பு வழங்கப்படும்போது தேவைப்படும் கிடங்குகளை அமைத்து கொடுக்கும் வேலைத்திட்டத்தை பயனாளிகள் பொறுப்பேற்க வேண்டுமெனவும், சுத்தமான குடிநீர் பாவனை தொடர்பில் கிராம மக்களை விழிப்பூட்டும் விசேட வேலைத்திட்டங்களை World Vision நிறுவனம் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் நடாத்துவதெனவும் இதற்கென விசேடமாக தெரிவு செய்யப்பட்ட புள்ளித்திட்டத்தின் கீழ் முன்னுரிமை ஒழுங்கின் பிரகாரம் பயனாளிகளை தெரிவு செய்வதெனவும் இக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் ஸ்கந்தபுரம், கிருஸ்ணபுரம், ஊற்றுக்குளம், அம்பாள் குளம், அம்பாள் நகர் மற்றும் புதுமுறிப்பு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கிராம வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.