;
Athirady Tamil News

செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திறைசேரிக்கு திரும்பியது

0
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மேலும் எலும்புக்கூடுகள் அப்பகுதிகளில் காணப்படுவதால் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் , அதற்காக 08 வார கால பகுதி தேவை என சட்ட வைத்திய அதிகாரி மன்றில் விண்ணப்பம் செய்ததற்கு அமைவாக , அதற்கான செலவீன பாதீட்டை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவிட்டப்பட்டது.
அதன் அடிப்படையில் சட்ட வைத்திய அதிகாரியினால் , மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான பாதீடு தயாரிக்கப்பட்டு , மன்றில் சமர்பிக்கப்பட்டதை அடுத்து , அது அங்கீகரிக்கப்பட்டு , நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பிரகாரம் , கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிதி விடுவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முன்னெடுக்க ஆயத்தங்களை செய்ய வேளை , யாழில் நிலவிய சீரற்ற கால நிலைகளால் , புதைகுழிக்குள் வெள்ள நீர் தேங்கி நின்றமையால் , அகழ்வாய்வு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்பட்டது.
அந்நிலையில் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதிகளில் செலவு செய்யப்படாத நிதிகள் திறை சேரிக்கு திரும்பியுள்ளது. அதனால் இவ்வாண்டுக்கு மீண்டும் புதிதாக செலவீன பாதீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு , மன்றினால் அது அங்கீகரிக்கப்பட்டு , மீண்டும் நீதி அமைச்சினால் அந்த நிதி மீள ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை செம்மணி புதைகுழி பகுதிக்குள் தற்போதும் வெள்ளம் தேங்கி நிற்பதனால் , எதிர்வரும் 09ஆம் திகதி நீதிமன்ற நேரடி கண்காணிப்பில் நல்லூர் பிரதேச சபையினால் , வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அன்றைய தினத்திற்கு பின்னரே மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பிலான முடிவுகள் எடுக்கப்படும் என நீதிமன்றம் நேற்றைய தினம் திங்கட்கிழமை அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.