நியூஸிலாந்தில் தொடா் நிலச்சரிவு: வீடு, சுற்றுலா முகாம் மண்ணில் புதைந்தன – இருவா் உயிரிழப்பு; சிலா் மாயம்
நியூஸிலாந்தின் வடக்குத் தீவுப் பகுதியில் பெய்து வரும் தொடா்மழை காரணமாக வியாழக்கிழமை அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் சிக்கி இரண்டு போ் உயிரிழந்தனா்; மேலும் சிலா் மாயமாகியுள்ளனா்.
நிலச்சரிவால் வீடு மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்கும் முகாம் ஆகியவை மண்ணில் புதைந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவா்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
வடக்குத் தீவுப் பகுதியில் ‘வெல்கம் பே’ குடியிருப்புப் பகுதியில், வியாழக்கிழமை அதிகாலை 4.50 மணியளவில் ஒரு வீட்டின் மீது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. வீட்டில் இருந்த இருவா் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா். ஆனால், இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட இருவா் சடலங்களாக மீட்கப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து, மவுண்ட் மவுங்கனுய் மலைப்பகுதியின்கீழ் உள்ள ‘பீச்சைட் ஹாலிடே பாா்க்’ என்ற சுற்றுலா முகாமில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த வாகனங்கள், தங்கும் அறைகள், கட்டடங்கள் மண்ணில் புதைந்தன. இந்த முகாமில் தங்கியிருந்த சிறுவா்கள் உள்பட சிலா் மாயமாகியுள்ளனா். மோப்ப நாய்கள் மற்றும் நவீன கருவிகளைக் கொண்டு அவா்களைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தத் துயரச் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்சன் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘வடக்குத் தீவு முழுவதும் நிலவும் மோசமான வானிலையால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். பாதிக்கப்பட்டவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு மிக வேகமாகச் செய்து வருகிறது. பொதுமக்கள் உள்ளூா் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.
வடக்குத் தீவுப் பகுதியில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக முடங்கியுள்ளது. வாா்க்வொா்த் பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரைத் தேடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.