;
Athirady Tamil News

ஆப்கான்–பாகிஸ்தான் தீவிரமடையும் மோதல் ; பதற்றத்தை தணிக்குமாறு ஐ.நா. வலியுறுத்தல்

0

ஆப்கானிஸ்தான் தலைநகரமான காபூல் பகுதியில் அமைந்துள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் மேற்கொண்டதாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த மாத இறுதியில் தொடங்கிய எல்லைத் தாண்டிய மோதல்களின் தீவிரமாக இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஆப்கானிஸ்தானுக்குள் பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு தலீபான் அரசு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. எனினும், பாகிஸ்தான் இக்குற்றச்சாட்டுகளை மறுத்து, தங்களது தாக்குதல்கள் காபூல் மற்றும் நங்கர்ஹார் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் ராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைத்ததாக விளக்கம் அளித்துள்ளது.

மேலும், பாகிஸ்தானுக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் புகலிடம் வழங்குவதாக குற்றம்சாட்டிய பாகிஸ்தான், இந்த தாக்குதல்கள் துல்லியமானவை எனவும் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சர்வதேச தலையீடு கோரப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், ஆசிய பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இதனிடையே, தாக்குதலால் மருத்துவமனை கடுமையாக சேதமடைந்துள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை சிறப்பு அறிக்கையாளர் கவலை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது அறிக்கையில், பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்ததுடன், சம்பந்தப்பட்ட தரப்புகள் பதற்றத்தைத் தணித்து, சர்வதேச சட்டங்களை மதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.