ரஷிய வீரர்களை சிறை பிடித்த உக்ரைனின் ரோபோ; வைரலான வீடியோ
கீவ்,
உக்ரைனுக்கு எதிராக 4 ஆண்டுகளாக போரில் ஈடுபட்டு வரும் ரஷியா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் உக்ரைனின் ரெயில் மீது நடந்த டிரோன் தாக்குதலில் பயணிகள் 5 பேர் பலியானார்கள். ரெயில் தீப்பற்றி எரிந்ததில் சிலர் காயமடைந்தனர்.
தொடர்ந்து தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தி வரும் சூழலில், அதனை எதிர்கொள்ள உக்ரைன் புதிய பாணியிலான தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்த போரில், எதிரிகளை வீழ்த்தும் யுக்தியுடன் வடிவமைக்கப்பட்ட உக்ரைனின் ரோபோ ஒன்று, ரஷிய ராணுவ வீரர்கள் 3 பேரை சிறை பிடித்து உள்ளது.
இதுதொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. டிராய்ட் டி.டபிள்யூ.-7.62 என்ற பெயரிடப்பட்ட, தரை வழியே எதிர்த்து போரிட கூடிய திறன் பெற்ற அந்த ரோபோ, உக்ரைனின் ராணுவ வீரர்களின் நேரடி தொடர்பு எதுவும் இல்லாமல் செயல்பட்டு உள்ளது.
அந்த வீடியோவில் ரஷிய ராணுவ வீரர்கள் கைகளை தூக்கி சரண் அடையும் நோக்கில் வந்தனர். அவர்களில் ஒருவர் ரத்த காயத்துடன் காணப்பட்டார். அந்த ரோபோவிடம் கே.டி.-7.62 என்ற இயந்திர துப்பாக்கி ஒன்று உள்ளது.
அதனுடன் இணைக்கப்பட்ட கணினி உதவியுடன், அதுவாகவே எதிரிகளை கண்டறிந்து, பின்தொடர்ந்து, இலக்குகளை தாக்கும் திறன் படைத்துள்ளது. துல்லிய தாக்குதல் நடத்தி அழிப்பதுடன், திறமையாக துப்பாக்கியால் சுடவும் அதனால் முடியும்.
இதனால், உக்ரைனிய வீரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். நவீன போர்களுக்கு எடுத்துக்காட்டாக இது அமைந்துள்ளது.