இலங்கை பொலிஸ் சேவையில் 32,000 வெற்றிடங்கள்
இலங்கை பொலிஸ் சேவையில் தற்போது சுமார் 32,000 உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் பணியாற்றும் கைரேகை நிபுணர்கள், குற்றப்பகுப்பாய்வு உத்தியோகத்தர்கள் மற்றும் தடயவியல் புகைப்படக் கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் இன்று (30) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
நிலவும் ஆள்ப்பற்றாக்குறை
காவல் திணைக்களத்தில் இருக்க வேண்டிய உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை விட தற்போது 32,000 பேர் குறைவாகவே பணியாற்றி வருகின்றனர். இந்த ஆண்டில் (2026) சுமார் 2,500 உத்தியோகத்தர்கள் ஓய்வுபெறவுள்ளனர்.
அத்துடன், அடுத்த ஆண்டில் (2027) மேலும் 2,700 உத்தியோகத்தர்கள் ஓய்வுபெறவுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
நிலவும் ஆள்ப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக முதற்கட்டமாக 10,000 புதிய உத்தியோகத்தர்களைப் காவல்துறை சேவையில் இணைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
குற்றங்களைத் தடுப்பதற்கும் சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பதற்கும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதுடன், மனித வளத்தை அதிகரிப்பதும் அவசியம் என அவர் இதன்போது வலியுறுத்தினார்.