அமெரிக்க அரசியலில் புதிய சர்ச்சை ; மெலானியாவுக்கு புடின் அனுப்பிய ரகசிய கடிதம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலானியா ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடமிருந்து தமக்குக் கிடைத்த கடிதம் குறித்து முதன்முறையாகப் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
அவரது சுயசரிதை புத்தகமான ‘Melania’ இன் புதிய பதிப்பில் இது தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.
2018ஆம் ஆண்டு ஹெல்சின்கியில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்க – ரஷ்ய உச்சிமாநாட்டிற்குப் பிறகு, ஜனாதிபதி புடின் மெலானியாவுக்கு இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார். அந்த மாநாட்டின் போது மெலானியா காட்டிய விருந்தோம்பல் மற்றும் கௌரவத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்தக் கடிதம் அமைந்திருந்தது.
ஜனாதிபதி புடின் மிகவும் நாகரீகமாகவும் கௌரவமாகவும் அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார்” என மெலானியா குறிப்பிட்டுள்ளார்.
மாநாட்டின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும், அதில் மெலானியாவின் பங்கு முக்கியமானது என்றும் புடின் அதில் பாராட்டியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ட்ரம்ப் அரசாங்கத்திற்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இரகசியத் தொடர்புகள் இருந்ததாக நீண்டகாலமாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், மெலானியா இந்தக் கடிதத்தை இப்போது வெளிப்படுத்தியிருப்பது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
குறிப்பாக, ரஷ்யாவுடனான உறவுகளை ட்ரம்ப் கையாண்ட விதம் குறித்து இப்போதும் விமர்சனங்களும் எழுந்துள்ளது.
உலகத் தலைவர்களுக்கிடையிலான இவ்வாறான கடிதப் பரிமாற்றங்கள் சாதாரணமான ராஜதந்திர நடைமுறைகள் (Diplomatic Protocols) என மெலானியா தரப்பு வாதிடுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.