;
Athirady Tamil News

சிறுவர் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் 600 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளுடன் கைதான நபர்

0

அவுஸ்திரேலியாவில் 600 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய விளையாட்டுகள் ஊடாக சிறுவர்களை இலக்கு வைத்து பாரிய அளவிலான பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்களில் ஈடுபட்ட 27 வயதுடைய நபர் ஒருவரை குயின்ஸ்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

15 நாடுகளைச் சேர்ந்த சுமார் 459 சிறுவர்கள்
அவுஸ்திரேலியா மற்றும் ஏனைய 15 நாடுகளைச் சேர்ந்த சுமார் 459 சிறுவர்கள் இந்த நபரின் மூலம் பாதிக்கப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த பெப்ரவரி மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த நபருக்கு எதிராக 596 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவரது இலத்திரனியல் சாதனங்களைப் பரிசோதித்த காவல்துறையினர், அவற்றில் 23,000-க்கும் மேற்பட்ட பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்களைக் கண்டறிந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் அவுஸ்திரேலியாவையும், ஏனையோர் ஆங்கிலம் பேசும் நாடுகளையும் சேர்ந்தவர்களாவர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 7 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களாவர்.

இதுவரை 360 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏனையோரை அடையாளம் காணும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. சந்தேக நபர் 2018 முதல் 2025 வரையான காலப்பகுதியில் இந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்.

அவர் மிகவும் பிரபலமான செயலிகள் மற்றும் விளையாட்டுகளைப் பயன்படுத்தி, ஆண் மற்றும் பெண் எனப் பல போலி அடையாளங்களை உருவாக்கி சிறுவர்களுடன் பழகியுள்ளார்.

சிறுவர்களை அச்சுறுத்தியும் வற்புறுத்தியும் பாலியல் ரீதியான படங்களை அனுப்ப வைத்து, அவற்றை மிகத் துல்லியமாகத் தனது கோப்புகளில் சேமித்து வைத்துள்ளார்.

“மிகவும் பிரபலமான செயலிகள் மூலம் சிறுவர்கள் இவ்வாறு கட்டாயப்படுத்தப்படுவது தற்போது அதிகரித்து வருகிறது. இது ஒரு குழந்தைக்கு ஏற்படுத்தும் மன உளைச்சல் மற்றும் அதிர்ச்சி மிகவும் பாரியதாகும்,” என குயின்ஸ்லாந்து பொலி ச் தெரிவித்துள்ளது.

குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.