160 கி.மீ. வேகத்தில் சிறுவன் ஓட்டிய கார் விபத்து: 7 பேர் உயிரிழப்பு, 5 பேர் படுகாயம்
பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த அயன் அலி (17) தன் நண்பர்கள் அஷ்ரம் ஷெரீஃப் (16), ஏத்தன் ஜார்ஜ் (17), அஷ்வின் நாயர் (17), பரத் (17), முகமது ஃபர்ஹான் (18) ஆகியோருடன் நேற்று முன்தினம் காலை 5 மணியளவில் ஹொசக்கோட்டையில் இருந்து தேவனஹள்ளி நோக்கி காரில் சென்றார். அப்போது அயன் அலியின் கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. அதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த ககன் (27) சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
மேலும் முன்னால் சென்ற சரக்கு வாகனத்தின் மீது கார் மோதியதில் அதன் ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் (32) படுகாயம் அடைந்தார். அயன் அலி மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் சரக்கு வாகனத்தின் மீது மோதியதில் அதன் சக்கரங்கள் தனித்தனியாக உடைந்து எதிரில் வந்த வாகனங்கள் மீது மோதியதில் அடுத்தடுத்து 2 வாகனங்கள் விபத்துக்கு உள்ளாயின. அதனால் 4 பேர் காயமடைந்தனர். அயன் அலி பயணித்த எக்ஸ்யூவி 700 கார் உடைந்து நொறுங்கி உருக்குலைந்து போனதில் 6 பேரும் உயிரிழந்தனர்.
போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், 17 வயதான அயன் அலி மணிக்கு 160 கி.மீ. முதல் 170 கி.மீ. வேகத்தில் காரை ஓட்டியதால், விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. அயன் அலி உள்ளிட்ட 6 பேரும் 10-ம் வகுப்பு மாணவர்கள் என தெரிய வந்துள்ளது.