;
Athirady Tamil News

மருதமுனையில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துஅரசு உத்தியோகத்தர் பரிதாபமாகப் பலி!

0

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்கு கடமைக்குச் சென்றபோது நேர்ந்த சோகம்; பெரியநீலாவணை பொலிஸார் விசாரணை.

அம்பாறை மாவட்டம் கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில், மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இன்று (16) காலை இடம்பெற்ற விபத்தில் அரசு உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கதிர்காமம் நோக்கிச் சென்ற பேருந்துடன், கல்முனைப் பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த அரசு உத்தியோகத்தர் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் மட்டக்களப்பு, நொச்சிமுனைப் பகுதியைச் சேர்ந்தவரும், பாண்டிருப்பில் திருமணம் முடித்து வசித்துவருபவருமான தியாகராஜா ஜெயகிருஸ்ணா (வயது 36) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தில் மரணமடைந்தவர் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் அரச உத்தியோகத்தராவார். இன்று காலை அவர் வழமை போல் தனது கடமை நிமிர்த்தம் பிரதேச செயலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போதே இந்த எதிர்பாராத விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்து காரணமாக அப்பகுதியில் சில மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த பெரியநீலாவணை பொலிஸார் சடலத்தைக் மீட்டு கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விபத்து இடம்பெற்றதற்கான காரணம் குறித்து பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

   

You might also like

Leave A Reply

Your email address will not be published.