;
Athirady Tamil News

கடும் வெப்ப காலநிலையால் சிறுவர்கள் பாதிப்பு; பெற்றோரே அவதானம்

0

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்குத் தோல் நோய்கள் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுகாதார நிபுணர்களின் கருத்துப்படி, அதிக வெப்பம் காரணமாகச் சிறுவர்களின் மென்மையான தோலில் வேர்க்குரு, தோலில் அரிப்பு மற்றும் பூஞ்சை தொற்று பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகப்படியான சோர்வு, தூக்கமின்மை மற்றும் பசியின்மை
இந்நிலையில் உடலில் நீர்ச்சத்து குறைவதால் அதிகப்படியான சோர்வு, தூக்கமின்மை மற்றும் பசியின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

தற்போது பல பாடசாலைகளில் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், மைதானங்களில் நீண்ட நேரம் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு ‘வெப்ப அதிர்ச்சி’ மற்றும் அதிகப்படியான களைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகச் சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விளையாடும் போது அதிகப்படியாக வேர்வை வெளியேறுவதால், உடலில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய உப்புச்சத்துக்கள் குறையக்கூடும். இது மூளை மற்றும் இதயத்தின் செயல்பாடுகளைப் பாதிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களைப் பாதுகாக்கப் நடவடிக்கை
வெப்பத்தின் தாக்கத்திலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்கப் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே சிறுவர்களைப் போதியளவு நீர் மற்றும் இயற்கையான பானங்களை அருந்தச் செய்ய வேண்டும். அதேசமயம் நண்பகல் வேளைகளில் சிறுவர்களை நேரடியாக வெயிலில் விளையாட அனுமதிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

முறையான கண்காணிப்புடன் சிறுவர்களை நீரில் விளையாட அனுமதிப்பது அவர்களின் உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும்.

விளையாட்டுப் பயிற்சிகளின் போது மாணவர்களுக்குப் போதிய இடைவேளைகளை வழங்குவதை விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்தக் கடும் வெப்பமான காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் கூடுதல் அவதானம் செலுத்துமாறும் சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.