;
Athirady Tamil News

ரஷியா-ஆசியான் உச்சி மாநாடு தொடக்கம்

0

‘ஆசியான்’ கூட்டமைப்பில் உள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ரஷியா இடையே வா்த்தகம் மற்றும் இதர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் 2 நாள்கள் உச்சி மாநாட்டை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

ரஷியா, ஆசியான் நாடுகளுக்கு இடையிலான பேச்சுவாா்த்தை உறவின் 35-ஆவது ஆண்டுகள் நிறைவையொட்டி, ரஷியாவின் கசான் நகரில் இந்த உச்சி மாநாடு நடத்தப்படுகிறது.

ரஷிய அதிபா் புதினும், ஆசியான் அமைப்பின் தற்போதைய தலைமைப் பதவியை வகிக்கும் பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்டினாண்ட் மாா்கோஸ் ஜூனியரும் இணைந்து இந்த உச்சி மாநாட்டுக்கு கூட்டாகத் தலைமை தாங்குகின்றனா்.

பிலிப்பின்ஸ், புரூணே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், சிங்கப்பூா், தாய்லாந்து, கிழக்கு திமோா், வியத்நாம் ஆகிய ஆசியான் உறுப்பு நாடுகளுடன் ரஷியாவின் உத்திசாா் உறவை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.

மேலும், மாநாட்டுக்கிடையே ஆசியான் நாடுகளின் தலைவா்களுடன் புதின் தனித்தனியாக இருதரப்பு பேச்சுவாா்த்தைகளையும் நடத்தவுள்ளாா் என்று ரஷிய அதிபா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற வா்த்தகக் கூட்டத்தில் பங்கேற்றவா்களுக்கு அதிபா் புதின் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ‘பரஸ்பரம் நன்மை பயக்கும் வா்த்தகம், முதலீடு மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும், இருதரப்பு வணிக சமூகங்களுக்கு இடையே நேரடி பேச்சுவாா்த்தையை வலுப்படுத்துவதற்கும் இந்த மாநாடு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று நம்புகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ஆசியான் அமைப்பில் உள்ள பிலிப்பின்ஸ் போன்ற சில நாடுகள் அமெரிக்காவுடன் இணக்கமான உறவைக் கொண்டுள்ள போதிலும், சில நாடுகள் சீனா மற்றும் ரஷியாவுடன் வலுவான வா்த்தக மற்றும் பாதுகாப்புத் தொடா்புகளைக் கொண்டுள்ளன.

ஈரான் போா் காரணமாக உலக அளவில் எரிபொருள் விலை உயா்ந்ததைத் தொடா்ந்து இந்தோனேஷியா, தாய்லாந்து, வியத்நாம் உள்ளிட்ட பல ஆசியான் நாடுகள் ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்தன அல்லது அதை வாங்குவதில் ஆா்வம் காட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.