;
Athirady Tamil News

சீனா – வட கொரியா நேரடி விமான சேவை மீண்டும் தொடக்கம்!

0

சீனா – வடகொரியா விமான சேவை 6 ஆண்டுகளுக்குப் பின் நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது.

சீனாவின் பெய்ஜிங் நகர் முதல் வடகொரியாவின் பியான்யாங் நகருக்கு பயணிகள் விமான சேவை 6 ஆண்டுகளுக்குப் பின் நேற்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இன்று வட கொரியா சென்றுள்ள சீனா ஏர் பயணிகள் விமானத்தை வட கொரியாவிற்கான சீனத் தூதர் உள்பட பலரும் அங்கு வரவேற்றனர்.

இரு நாடுகளுக்குமிடையே ரயில் சேவை கடந்த மார்ச் 12 அன்று தொடங்கியது.

கோவிட் பெருந்தொற்று காலம் தொடங்கிய 2020 முதல் சீனா – வடகொரியா இடையே ரயில் மற்றும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டது.

பெருந்தொற்று காலத்தில் மற்ற நாட்டு பயணிகளுக்குத் தடை விதித்த வட கொரியா 2024-ம் ஆண்டு ரஷிய பயணிகளுக்கு அனுமதியளித்தது.

பெருந்தொற்று தடைக்கு முன்னர் வட கொரியாவுக்கு செல்லும் பயணிகளில் 90% பேர் சீனர்களாக இருந்தனர். ஆனால், பின்னர் மீண்டும் அந்த பயணத்தைத் தொடங்குவதற்கு சீனா தாமதப்படுத்தியதன் காரணம் தெரியவில்லை.

சீனா வடகொரியாவுடன் சிறந்த வணிக உறவைப் பேணி வருகிறது. ஆனால், தென் கொரியா மற்றும் அமெரிக்கா மீது தாக்குதலுக்கு வட கொரியா நடத்தும் ஏவுகணைச் சோதனைகளுக்கு சீனா தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருகிறது.

கடந்தாண்டு செப்டம்பரில் வட கொரிய அதிபர் கிம் ஜான் உங் ராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்ள சீனாவின் பெய்ஜிங் வந்தார். வட கொரிய அதிபர் ஒருவர் பல ஆண்டுகளுக்குப் பின் சீனாவுக்கு வந்தது அதுவே முதல்முறை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.