விபத்துக்கள் மற்றும் காயங்களைக் குறைக்கும் நோக்கில் நிலைபேறான வழிநடத்தல் குழு அங்குரார்ப்பணம்
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகரித்து வரும் விபத்துக்கள் மற்றும் காயங்களைக் குறைக்கும் நோக்கில் ஒரு பல்துறைசார் விசேட நிலைபேறான வழிநடத்தல் குழு (Steering Committee) இன்று(28) உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நௌசாட் முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பல்வேறு முடிவுகள் எட்டப்பட்டதுடன் விபத்துக்களைத் தடுக்க வெறும் விழிப்புணர்வு மட்டும் போதாது சகல துறையினரினதும் கூட்டு முயற்சி அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டது.
இதன் அடிப்படையில் பின்வரும் தரப்பினரை உள்ளடக்கிய ஒரு வலுவான குழு உருவாக்கப்பட்டுள்ளதுடன் அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் (NGOes) பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் உள்ளடங்குகின்றனர்.
மேலும் இந்தக் குழுவின் ஊடாக சம்மாந்துறை பிராந்தியத்தில் வீதி விபத்துக்கள், வீட்டு விபத்துக்கள், விலங்குக் கடிகள் மற்றும் வேலைத்தள விபத்துக்கள் பற்றிய விரிவான விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் விபத்து தவிர்ப்பு முறைகள் குறித்து நேரடிப் பயிற்சிகள் வழங்கப்படும்.
காயங்கள் ஏற்படுவதற்கான மூல காரணங்களைக் கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகள் அரச மட்டத்தில் எட்டப்படும் என வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் ‘பாதுகாப்பு என்பது ஒரு தெரிவு அல்ல, அது எமது கடமை. சிறிய கவனயீனம் ஒரு வாழ்நாள் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஒன்றிணைந்து பாதுகாப்பான சம்மாந்துறையை கட்டியெழுப்புவோம்!’ என்பதற்கிணங்க விபத்துக்கள் மற்றும் காயங்களைக் குறைக்கும் நோக்கில் நிலைபேறான வழிநடத்தல் இக்குழு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுமார் 4200 பேர் பல்வேறு விபத்துக்கள் மற்றும் காயங்கள் காரணமாக அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் .
இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால் இந்த காயங்களில் பெரும்பாலானவை முன்கூட்டியே அவதானத்துடன் செயல்பட்டிருந்தால் தவிர்க்கப்படக்கூடியவை என்பதாகும்.
