;
Athirady Tamil News

கொழும்பில் அதிசொகுசு மாளிகையால் சிக்கிய மகிந்த குடும்பம் – பல ரகசியங்கள் அம்பலம்

0

கொழும்பு, டொரிங்டன் மாவத்தையில் அமைந்துள்ள, 40 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சொகுசு மாளிகை தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தற்போது பாரிய விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது.

இந்தத் காணி வெறும் சொத்து மட்டுமல்ல, கடந்த காலங்களில் யோசித ராஜபக்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட சர்ச்சைக்குரிய CSN தொலைக்காட்சி சேவையின் உத்தியோகபூர்வ தலைமையகமாகவும் இயங்கி வந்த இடமாகும்.

மேரி லூட்ஸ் விக்ரமசிங்க என்ற பெயரிலேயே ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இந்தச் சொத்து வாங்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் அது முன்னாள் ஜனாதிபதியின் மனைவியான ஷிரந்தி ராஜபக்சவின் பிறப்புச் சான்றிதழில் உள்ள உண்மையான பெயராகும்.

ராஜபக்சர்களின் சொத்து
கடந்த 2001ஆம் ஆண்டு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மகிந்த ராஜபக்சவுக்காக, அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வாடகை அடிப்படையில் வழங்கப்பட்ட இந்த வீடு, மகிந்த ஜனாதிபதியான பின்னர் ராஜபக்ச குடும்பத்தின் முழுமையான சொந்தமாக மாறியுள்ளது.

எனினும், 40 கோடி மதிப்புள்ள இந்த காணி வெறும் 3.5 கோடி ரூபாய் என்ற மிகக் குறைந்த மதிப்பில் கொள்வனவு செய்யப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வளவு பெரிய தொகையை எவ்வாறு பெற்றார் என்று லஞ்ச ஊழல் ஆணைக்குழு எழுப்பிய கேள்விகளுக்கு ஷிரந்தியிடம் இதுவரை முறையான விளக்கம் கிடைக்கவில்லை. இந்தச் சொத்துக்கான உறுதிப்பத்திரத்தைத் தயாரித்தவரும், தனது முன்னிலையில் எவ்வித பணப் பரிமாற்றமும் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவின் மகன், தொழிலதிபர் பிரபாத் நாணயக்காரவிடம் பணம் கொடுத்து இதனை வாங்கிப் பின்னர் தன்னிடம் ஒப்படைத்ததாக ஷிரந்தி ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

புதிய சட்டத்தால் சிக்கிய ரகசியம்
எனினும், தொழிலதிபர் பிரபாத் நாணயக்காரவுக்கு அதிவேக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பாரிய அரச திட்டங்களை வழங்கியதற்கு கைமாறாக, இந்த மாளிகை ராஜபக்ச குடும்பத்திற்கு லஞ்சமாகக் கிடைத்ததா என பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த மர்மமான சொத்து விவகாரத்தை வெளிக்கொண்டு வருவதற்காக, அரசாங்கம் இம்முறை புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட ‘2025ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க குற்றச்செயல்களின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் பற்றிய சட்டத்தை பயன்படுத்தியுள்ளது.

இந்த கடுமையான சட்டத்தின் 34 (1) பிரிவின் கீழ், ஒருவரிடம் உள்ள சொத்து அவரது சட்டபூர்வமான வருமானத்தில் ஈட்டப்பட்டது அல்ல எனத் தெரியவந்தால், அதனை குற்றச்செயல் மூலம் ஈட்டப்பட்ட சொத்தாகக் கருத நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.

மேலும், இச்சட்டத்தின் 34 (3) பிரிவின்படி, இந்த சொத்து தனது சட்டபூர்வ வருமானத்தில் பெறப்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டிய முழுப் பொறுப்பும் இப்போது சந்தேக நபரான ஷிரந்தி ராஜபக்சவிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.