;
Athirady Tamil News

எரிபொருள் விலை மீண்டும் உயருமா? புதிய தரவுகள் வெளியீடு

0

உலக சந்தையில் நிலவும் கடுமையான விலை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அண்மைய மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்காக பாரிய தொகையை செலவிட்டுள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

கூட்டுத்தாபனம் மே 6 மற்றும் மே 10 ஆகிய திகதிகளில் தனது அண்மைய இரண்டு டீசல் கப்பல்களை பெற்றுக்கொண்டுள்ளதுடன், அடுத்த சில வாரங்களுக்கு புதிய கப்பல்கள் வருவதற்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டிற்கு தற்போதைய எரிபொருள் இருப்பு போதுமானதாக இருந்தாலும், கொள்வனவு செலவுகள் தொடர்ந்து உயர்ந்த மட்டத்திலேயே இருப்பதாக CPC முகாமைத்துவ பணிப்பாளர் மயூரா நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் உலக சந்தை விலை உயர்வு காரணமாக டீசல் மிக உயர்ந்த விலையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு பீப்பாய் சுப்பர் டீசல் 303.76 அமெரிக்க டொலர் வரை உயர்ந்ததாகவும், அதே காலத்தில் டீசல் பீப்பாய் ஒன்றுக்கு 281.87 முதல் 289.47 டொலர் வரை இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மார்ச் முதல் மே ஆரம்பம் வரை டீசல் விலை பீப்பாய் ஒன்றுக்கு 172.74 முதல் 303.76 டொலர் வரை மாறுபட்டதாகவும் தரவுகள் கூறுகின்றன. பெட்ரோல் விலையும் உயர்வுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பெட்ரோல் 92 இன் விலை ஒரு பீப்பாய்க்கு 130.89 முதல் 153.70 டொலர் வரை இருந்ததாகவும், பெட்ரோல் 95 இரண்டு கப்பல்களில் முறையே 143.53 மற்றும் 154.72 டொலர் விலையில் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, உலக சந்தை விலை உயர்வு உள்நாட்டு பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விளக்கமளித்துள்ளார்.

அவரின் கூற்றுப்படி, எரிபொருள் இறக்குமதி செலவு பெப்ரவரி மாதத்தில் 98 மில்லியன் டொலராக இருந்த நிலையில், மார்ச் மாதத்தில் 216 மில்லியனாகவும், ஏப்ரலில் 368 மில்லியனாகவும் உயர்ந்துள்ளது. மே மாதத்தில் இது 522 மில்லியன் டொலராக அதிகரிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டில் ஒரு லீற்றர் டீசலின் உண்மையான அடக்கச் செலவு 720 ரூபாயாக இருந்தாலும், பொதுமக்களுக்கு 392 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை சூத்திரம் மற்றும் கணக்கீடுகள் குறித்து மேலதிக விளக்கங்கள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.