;
Athirady Tamil News

கொழும்பில் விமல் வீரவங்சவை அடித்து துரத்திய பொலிஸார்; விழுந்து எழும்பி ஓட்டம்!

0

இலங்கையில் இன்று (18) போர்வீரர்களை (ரணவிரு) நினைவுகூரும் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்துவதற்குச் சென்ற முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அங்கு பெரும் பரபரப்பும் அமைதியற்ற சூழலும் ஏற்பட்டது.

பொலிஸ் அதிகாரிகளைத் தள்ளிவிட்டுக்கொண்டு முன்னோக்கிச் செல்ல முயன்றபோது விமல் வீரவங்ச தரையில் விழும் காட்சி பதிவாகியிருந்தது

எந்தவொரு நாட்டின் குடிமகனுக்கும் நாட்டைப் பாதுகாத்த மாவீரர்களை மலர் தூவி கௌரவிப்பதற்கும், நினைவு கூருவதற்கும் முழுமையான உரிமை இருக்க வேண்டும் எனத் தெரிவித்து, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்புப் பிரிவினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட விமல் வீரவன்ச
போரில் உயிர்த்தியாகம் செய்த இராணுவத்தினரை கௌரவிப்பதற்காக விமல் வீரவன்ச மற்றும் அவரது ஆதரவாளர்கள் மலர் வளையங்களுடன் சென்றிருந்த போது, பாதுகாப்புப் பிரிவினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்தத் தடையானது அங்கு கூடியிருந்த தேசப்பற்றாளர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியது. இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த விமல் வீரவன்ச,

நாட்டில் அமைதியை நிலைநாட்ட உயிரைத் தந்த எமது போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த சாதாரண குடிமக்களுக்கு உரிமை இல்லையா எனக் கேள்வி எழுப்பியதுடன், தமிழ் டயஸ்போராவின் அழுத்தங்களுக்கும், அவர்களின் மனக்கசப்பிற்கும் பயந்து கொண்டே அரசாங்கத்தினால் இவ்வாறான முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்றும் குற்றம் சாட்டினார். ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதி இலங்கையில் இருவேறு விதமாக நினைவு கூரப்படுகிறது.

வடக்கில் போரில் உயிரிழந்த தமிழ் மக்கள் மற்றும் போராளிகளை நினைவுகூரும் “முள்ளிவாய்க்கால் நினைவு நாளாகவும்”, தெற்கில் போரை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத்தினரை நினைவுகூரும் “ரணவிரு நாளாகவும்” இது அனுசரிக்கப்படுகிறது.

இருப்பினும், இன்றைய தினம் விமல் வீரவன்ச உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்தத் தடை விதிக்கப்பட்டமையானது, சர்வதேச அரசியல் அழுத்தங்கள் மற்றும் உள்நாட்டு நல்லிணக்கத்தைக் காப்பதாகக் கூறிக்கொள்ளும் அரசாங்கத்தின் தந்திரோபாய நகர்வுகளே காரணம் என அரசியல் விமரிசகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

புலம்பெயர் அமைப்புகளின் அதிருப்தியைச் சம்பாதிக்கக் கூடாது என்ற நோக்கில், சொந்த நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு அதிகாரிகள் முன்னுரிமை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை விமல் வீரவன்ச தரப்பு பலமாக முன்வைத்துள்ளது.

சம்பவத்தின்போது அங்கு நின்ற இருவரை பொலிஸார் கைதுசெய்து, அதில் ஒருவருக்கு விலங்கிட்டு பொலிஸ் ஜீப் வண்டியில் ஏற்றிச் செல்ல முயன்றனர்.

இதன்போது உடனடியாக தலையிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, கைதுசெய்யப்பட்டவர்களுடன் தானும் பொலிஸ் ஜீப் வண்டியில் ஏறிக்கொண்டார். விமல் வீரவங்சவின் இந்த அதிரடித் தலையீட்டை அடுத்து, கைதுசெய்யப்பட்ட இருவரும் பொலிஸாரால் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.