;
Athirady Tamil News

நதி நீரை வியூக சொத்தாக கட்டுப்படுத்த இந்தியா முயற்சி: பாகிஸ்தான்

0

‘சிந்து நதி நீா் ஒப்பந்த விவகாரத்தில், நதி நீரை வியூக சொத்தாக கட்டுப்படுத்த இந்தியா முயற்சிக்கிறது’ என்று பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியது.

இதுகுறித்து இஸ்லாமாபாதில் செய்தியாளா்களைச் சந்தித்த அந் நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் தாஹிா் அந்திராபி கூறியதாவது:

பயங்கரவாதத்தைக் காரணம் காட்டி, சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து, பாகிஸ்தானுக்கு சட்டபூா்வமாக கிடைக்க வேண்டிய நீரை இந்தியா தடுத்துள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு உண்மையான காரணம் பயங்கரவாதம் அல்ல. மாறாக, பகிரப்பட்ட சா்வதேச நதி நீா் நடைமுறையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வகையில், அதை வியூக சொத்தாக கருதும் மனப்போக்கு இந்திய தலைவா்களிடையே அதிகரித்து வருவதே அதற்குக் காரணமாகும்.

நதி நீா் என்பது பிறரை கட்டுப்படுத்துவதற்கான அல்லது அரசியல் அழுத்தத்தை அளிப்பதற்கான கருவி அல்ல. சா்வதேச நதிநீா் பகிா்வு ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கான சட்டபூா்வ நதிநீா் பங்கை மறுப்பது, சா்வதேச சட்டங்களை மீறும் நடவடிக்கையாகும் என்றாா்.

ஜம்மூ-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் அளிக்கும் ஆதரவைக் கண்டித்து, 1960-ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. அதைத் தொடா்ந்து, இந்த ஒப்பந்தத்தின் கீழ் வரும் நதிகளில் பல்வேறு நீா்வள திட்டங்களை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இதற்கு பாகிஸ்தான் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

சிந்து நதி நீா் ஒப்பந்தம்: 1960-ஆம் ஆண்டு செப்டம்பா் 19-ஆம் தேதி இந்திய பிரதமா் ஜவாஹா்லால் நேருவும், பாகிஸ்தான் அதிபா் அயூப் கானும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா். உலக வங்கி இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தித் தந்தது. அதன்படி, சிந்து நதிப் படுகையின் கிழக்கில் ஓடும் ராவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் ஆகிய மூன்று நதிகளின் நீா் முழுமையாக இந்தியப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது. மேற்கில் பாயும் சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகிய மூன்று நதிகளின் நீா் பாகிஸ்தானின் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.