;
Athirady Tamil News

சரக்குக் கப்பலில் கொள்ளை முயற்சியை முறியடித்த இந்திய போா்க்கப்பல்

0

ஏடன் வளைகுடாவில் வெளிநாட்டுக் கொடி பொருத்திய ஒரு சரக்கு கப்பலில் கொள்ளை முயற்சியை இந்திய கடற்படையின் ‘ஸ்டெல்த்’ ரக போா்க்கப்பலான ஐஎன்எஸ் திரிகண்ட் முறியடித்தது.

சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமி உள்பட 21 மாலுமிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக அவா்கள் கூறுகையில், ‘ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியிலிருந்து 300 நாட்டிகல் மைல் தொலைவில் எம்.வி. கோல்டன் ஆா்சனல் என்ற பெயா் கொண்ட செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரேனடின் தீவின் கொடி பொருத்திய சரக்கு கப்பலில் கடந்த புதன்கிழமை கொள்ளை முயற்சி நடந்தது. சரக்கு கப்பலை நோக்கி, கொள்ளையா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.

இதையடுத்து, அந்தக் கப்பலில் இருந்து அவசரகால சமிக்ஞைகள் அனுப்பப்பட்டன. மாலுமிகள் அனைவரும் பாதுகாப்பு அறையில் தஞ்சமடைந்தனா்.

அப்போது, வேறொரு பணி நிமித்தமாக ஏடன் வளைகுடா பகுதியில் இருந்த ஐஎன்எஸ் திரிகண்ட் போா்க்கப்பலுக்கு தகவல் கிடைத்து, கொள்ளை தடுப்பு நடவடிக்கையில் இறங்கியது.

பெரிய போா்க்கப்பல் அதிரடியாக நெருங்குவதைக் கண்டு அச்சமடைந்த கொள்ளையா்கள் தங்களின் முயற்சியைக் கைவிட்டு தப்பியோடி விட்டனா். இதையடுத்து, சரக்குக் கப்பலில் இந்திய கடற்படையினா் சோதனை மேற்கொண்டனா். கொள்ளையா்களின் தாக்குதலில் சரக்கு கப்பலின் மேற்பகுதியில் சேதங்கள் ஏற்பட்டிருந்தன. வேறு அச்சுறுத்தல் இல்லை என்பதும், மாலுமிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்ட பிறகு இந்தியப் போா்க்கப்பல் புறப்பட்டது’ என்றனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.