;
Athirady Tamil News

சமூக ஊடக மோசடிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம்..! பொதுமக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை

0

இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு எச்சரித்துள்ளது.

கணினிகள் அல்லது கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி, தனிப்பட்ட தரவுகளைத் திருடுதல், வங்கிக் கணக்குகளை ஹேக் செய்தல், சமூக ஊடகக் கணக்குகளைக் கைப்பற்றுதல் மற்றும் போலி இணையத்தளங்களை உருவாக்கி பண மோசடி செய்தல் போன்ற சட்டவிரோத செயல்கள் தற்போது அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இணையவழி நிதி மோசடி முறைப்பாடுகள்
இதேவேளை, டெலிகிராம், வட்ஸ்அப் போன்ற கணக்குகள் மற்றும் ஏனைய சமூக ஊடகப் பின்னணிகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் இணையவழி நிதி மோசடிகள் குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பெரும் தொகை லொத்தர் பரிசுகள், உடனடிக் கடன், பகுதிநேர அல்லது ஒன்லைன் வேலை மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேலை மற்றும் உயர் கல்வி வாய்ப்புகள் போன்ற உத்திகளை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே பொதுமக்கள் பின்பற்றவேண்டிய அறிவுறுத்தல்களை பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் பின்பற்றவேண்டிய அறிவுறுத்தல்கள்
சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகம் இல்லாத நபர்கள் அதிக வருமானம் தருவதாகக் கூறி செய்யும் மோசடியான தூண்டுதல்களுக்கு ஆளாகவேண்டாம்.

அடையாளம் தெரியாத நபர்களால் சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைய இணைப்புக்களை கிளிக் செய்வதையோ அல்லது கியூ.ஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்வதையோ தவிர்க்கவும்.

இணையவெளியில் அறிமுகமில்லாத நபர்களின் கணக்குகளுக்குப் பணம் அனுப்புவதையோ, அவர்களுடன் வங்கி விபரங்களைப் பகிர்வதையோ அல்லது உங்கள் வங்கிக் கணக்குகளைப் பிறர் பயன்படுத்த அனுமதிப்பதையோ முற்றாகத் தவிர்க்கவும்.

உங்கள் தனிப்பட்ட விபரங்கள், கணக்கு இலக்கங்கள், கடவுச்சொற்கள் அல்லது கியூ.ஆர் குறியீடுகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநபர்களுடன் பகிரவேண்டாம்.

அறிமுகமில்லாத நபர்கள் வழங்கும் தொலைபேசி செயலிகளை நிறுவும் போது பாதுகாப்பு முறைகள் குறித்து அவதானமாக இருங்கள். அத்துடன், உங்கள் தொலைபேசியின் அணுகல் அனுமதிகளை பிறருக்கு வழங்க வேண்டாம்.

இவ்வாறான நிதி மோசடிகளில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்ய நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபரினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலக்கங்கள் அறிவிப்பு
எனவே பொதுமக்கள் இவ்வாறான மோசடிகள் குறித்து பின்வரும் இலக்கங்களில் அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு (மேற்பார்வை அதிகாரிகள்): 071 – 8592918 / 071 – 8591765செய்தி சேவை

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு (அலுவலகம்) : 011 – 2300756

You might also like

Leave A Reply

Your email address will not be published.