வவுனியாவை அதிரவைத்த ‘சிறுவர் பாதாளக் குழு’: மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய 7 பேர் கைது; நீதிமன்ற உத்தரவால் சிறுவர் இல்லத்தில் அடைப்பு!
வவுனியாவை அதிரவைத்த ‘சிறுவர் பாதாளக் குழு’: மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய 7 பேர் கைது; நீதிமன்ற உத்தரவால் சிறுவர் இல்லத்தில் அடைப்பு!
சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ‘வவுனியா சிறுவர் பாதாளக் குழு’ தாக்குதல் சம்பவம் தொடர்பாக 7 மாணவர்களை ஈரட்டைப்பெரியகுளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான இரு மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் அண்மையில் ஒரு அதிர்ச்சியூட்டும் காணொளி பரவலாகப் பகிரப்பட்டது. அதில், வவுனியா பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், மற்றுமொரு தரப்பைச் சேர்ந்த இரு மாணவர்களை மனிதாபிமானமற்ற முறையில் மிகக் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இக்காணொளி தொடர்பாக தீவிர விசாரணைகளில் இறங்கிய ஈரட்டைப்பெரியகுளம் பொலிஸார், தாக்குதலில் ஈடுபட்ட வவுனியா, ஈரட்டைப்பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 7 மாணவர்களை அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் 14 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கொ0டூரத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த 15 வயதுடைய இரு மாணவர்கள், தற்போது வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 7 மாணவர்களும் இன்று (03.06.2026) வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதவான், சந்தேக நபர்களான 7 மாணவர்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரை கெபித்திகொல்லாவ சிறுவர் பராமரிப்பு (பரோல்) இல்லத்தில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ஈரட்டைப்பெரியகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் சிறுவர்கள் மத்தியில் இத்தகைய வன்முறைப் போக்கு அதிகரித்திருப்பது பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பலத்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.