சடலமாக மீட்கப்பட்ட சிறுமிகள் இருவர்… கடும் கொந்தளிப்பில் தென் அமெரிக்க நாடொன்று
கொலை செய்யப்பட்ட இரண்டு பதின்வயது சிறுமிகளின் உடல்கள், இரண்டு நாட்கள் இடைவெளியில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அர்ஜென்டினாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடல் துண்டு துண்டாக
பல ஆண்டுகளாகப் பெண்ணியப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அர்ஜென்டினாவில் நீடித்து வரும் பெண் கொலை நெருக்கடியை இந்த சமீபத்திய கொலைகள் அம்பலப்படுத்தியுள்ளது.
மேலும், ஜாவியர் மிலேயின் தீவிர வலதுசாரி நிர்வாகத்தின் கீழ், பாலினம் சார்ந்த வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவைக் கைவிடுவதற்கான முடிவு குறித்து இவை கவலையைத் தூண்டியுள்ளன.
14 வயதான அகோஸ்டினா வேகாவின் சடலம், கோர்டோபா நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு வயலில் சனிக்கிழமையன்று காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டது.
உள்ளூர் ஊடகச் செய்திகளின்படி, அவர் கழுத்து நெரிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்; மேலும் அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்தது. மே 23, சனிக்கிழமை இரவு அவர் வீட்டிலிருந்து கிளம்பி, குடும்ப நண்பரான 33 வயது கிளாடியோ பேரெலியரின் வீட்டிற்கு வாடகை டாக்சியில் சென்றுள்ளார்.
இந்த நிலையில், பேரெலியரின் வீடு இருந்த இடத்துடன் பொருந்தக்கூடிய ஒரு சந்திப்பிற்கு வேகாவை அழைத்துச் சென்றதாக டாக்சி சாரதி பொலிசாரிடம் தெரிவித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
ஒரு பெண்ணையோ அல்லது சிறுமியையோ அவரது பாலினத்தின் காரணமாகக் கொல்லும் பெண்ணினப்படுகொலையாக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. பேரெலியர் காவலில் உள்ளார், மேலும் அவர் கொலைக் குற்றத்தை மறுத்துள்ளார்.
கழுத்து நெரிப்பே காரணமாக
2025-ஆம் ஆண்டில் ஒரு பெண்ணைக் கடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, பேரெலியர் ஏற்கனவே ஒரு சட்ட வழக்கில் சிக்கியிருந்தார். அந்த வழக்கில் அவர் 20 நாட்கள் காவலில் வைக்கப்பட்டிருந்து, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே, மிசியோன்ஸ் மாகாணத்தில் உள்ள எல்டோராடோ நகரில், கைவிடப்பட்ட ஒரு கட்டுமானத் தளத்தில் இருந்த கழிவுநீர்த் தொட்டி ஒன்றில், 17 வயதான டுல்ஸ் காண்டியாவின் உடல் மே 28 அன்று கண்டெடுக்கப்பட்டது.
டுல்ஸ் காண்டியா சுமார் 12 நாட்களாக மாயமான நிலையில், அவர் இறந்து ஐந்து அல்லது ஆறு நாட்கள் ஆகியிருக்கும் என்று நோயியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். மட்டுமின்றி, வேகாவைப் போலவே, அவரது இறப்பிற்கும் கழுத்து நெரிப்பே காரணமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், அவரது கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 47 வயதான டாக்சி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் தரப்பில் தெரிவிக்கையில், 17 வயதான காண்டியா, தன்னை விட 30 வயது மூத்தவரான அந்த நபருடன் காதல் உறவில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
பெண்ணிய ஆர்வலர்கள் புதன்கிழமை அன்று நடத்திய 11வது வருடாந்திர ‘நி உனா மெனோஸ்’ என்ற பெண் கொலை எதிர்ப்புப் பேரணிக்குச் சில நாட்களுக்கு முன்பு அந்த இரண்டு சிறுமிகளும் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.