கடற்தொழிலுக்கு சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசாவின் நிதியுதவியில் வாழ்வாதார உதவி
கடற்தொழிலுக்கு சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசாவின் நிதியுதவியில் வாழ்வாதார உதவி
அண்மையில் நெடுந்தீவு கடற்பகுதியில் கடற்தொழிலுக்காக சென்ற மீனவர் ஒருவர் கடலுக்குள் தவறி வீழ்ந்த நிலையில் தமிழ்நாடு நாகபட்டினம் கடற்கரையில் உருக்குலைந்த சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையாகிய இவரிடம் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இவரோடு தொழிலுக்கு சென்ற இளைஞர் ஒருவர் நெடுந்தீவு பிரதேச மீனவர்களால் மீட்கப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் கடற்படையினரோ அல்லது அரசாங்கமோ எந்தவித உதவிகளையும் மேற்கொள்ளவில்லையென்று நெடுந்தீவு கடற்தொழிலாளர் சங்கத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தமிழ்த்தேசிய பேரவையின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஜனநாயக தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் ஜனநாயக தமிழரசு கட்சியின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே. வி. தவராசா அவர்களின் நிதியுதவியில் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரு மீனவர்களின் குடும்பங்களுக்கும் பெறுமதிமிக்க உலருணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் புங்குடுதீவு பிரதேசத்திலிருந்து கடற்தொழிலுக்காக சென்று எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மூன்று தினங்கள் கடலில் தத்தளித்த நிலையில் எழுவைதீவு கடற் பகுதியில் மீனவர்களால் மீட்கப்பட்ட மூன்று கடற் தொழிலாளிகளுக்கும் வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன், இந்து மத குருக்கள் முரளி சர்மா, ஜனநாயக தமிழரசுக் கட்சியின் நெடுந்தீவு அமைப்பாளர் இரத்தினம் மற்றும் கடற்தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
தீவகத்தில் பாதிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட ஐந்து மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிக்காக ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா அவர்கள் ரூபாய் 150000 வழங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
