;
Athirady Tamil News

எரிபொருள் விலை மாற்றம் ; பேருந்து கட்டணம் திருத்தம் விரைவில்

0

ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் பேருந்து கட்டணத் திருத்தத்தை ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்த அனுமதி வழங்குமாறு தனியார் பஸ் சங்கங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பான எழுத்துப்பூர்வ கோரிக்கை நேற்று (24) கையளிக்கப்பட்டதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அடுத்த ஐந்து நாட்களுக்குள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கட்டணத் திருத்தம் தொடர்பான கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்படும் பஸ் கட்டணத் திருத்தம் ஜூலை 5 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.

எனினும், இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படவுள்ள எரிபொருள் விலை மாற்றத்தை கருத்தில் கொண்டு, அனைத்து தனியார் பேருந்து சங்கங்களுடனும் கலந்துரையாடி அவர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னர், வழக்கம்போல் ஜூலை 1 ஆம் திகதி முதல் கட்டணத் திருத்தத்தை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதற்கான அறிவிப்பு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், கட்டணத் திருத்தம் தொடர்பில் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பஸ் கட்டணத் திருத்தம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.