கேத்தனை தள்ளிவிட ஒத்திகை! கொலையின் பின்னணியில் மணமகனின் திக்குவாய், தலைமுடி பிரச்னை?
வருங்கால மனைவியால் படுகொலை செய்யப்பட்ட இளம் தொழிலதிபர் கேத்தன் அகர்வாலுக்கு தலையில் முடியில்லாத பிரச்னையும் திக்குவாய் பிரச்னையும் இருந்ததே கொலைக்கான பின்னணியா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
கொலை நடந்த கோட்டைப் பகுதி விசாரணை நடைபெறுவதால் மூடப்பட்டுள்ளது. தற்போது நடந்த விசாரணையில், கொலையாளிகள் சியா – சேத்தன் இருவரும் அங்குச் சென்று கேத்தனை எப்படி தள்ளிவிடுவது என ஒத்திகைப் பார்த்திருப்பதாகவும் காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
புணே கொலை வழக்கு விசாரணையில், நாள்தோறும் காவல்துறை வெளியிடும் தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கேத்தனுக்கு லேசான திக்குவாய் இருந்ததும், தலைமுடி குறைவாக இருந்ததும் கொலைக்குப் பின்னணியாக இருந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால், திருமண பேச்சுவார்த்தை நடந்தபோதே, கேத்தனுக்கு தலை முடி இல்லை, அதனால், அவர் விக் போன்ற ஒன்றைப் பயன்படுத்துவதையும் பேசும்போது லேசாக திக்குவாய் ஏற்படும் என்பதையும் பெண் வீட்டாருக்கு நாங்கள் தெளிவாக எடுத்துச் சொன்னபிறகே, அவர்கள் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டனர்.
மணமகள் சியாவுக்கும் மணமகன் பற்றி அனைத்தும் தெரிந்தே இருந்தது. ஆனால், கேத்தன் பற்றி குடும்பத்தினர் வற்புறுத்தி அவர் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டாரா, அவரைப் பிடிக்காமல் இந்த கொலை நடந்ததா என்பது பற்றி எங்களுக்குத் தெரியவில்லை என்கிறார் கேத்தன் தந்தை.
புனே படுகொலையில் நடந்தது என்ன?
மகாராஷ்டிர மாநிலம் புணேவில், சியா – கேத்தன் குடும்பங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக இவர்களுக்கு திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்ட நிலையில், சியா – சேத்தன் நட்பு குறித்து கேத்தனுக்கு ஏற்கனவே சந்தேகம் ஏற்பட்டதும் வெளியாகியிருந்தது.
சியா – கேத்தன் ஜோடிக்கு கடந்த பிப்ரவரியில் நிச்சயதார்த்தம் முடிந்து நவம்பரில் திருமணம் நடக்க இருந்தது. இதற்காக ஜெய்ப்பூரில் ரூ.17 கோடியில் அரண்மனை ஒன்று வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. விருந்தினர்களை திருமணத்துக்கு அழைத்துச் செல்ல விமானங்கள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அனைத்தும் வீண். மணமகன், மணமகளால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் குற்றவாளிகள் இருவரையும் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று குற்றம் எப்படி நடந்தது என நடித்துக் காட்டச் சொல்லியிருக்கிறார்கள். அங்கே கேத்தனுடன் இருந்த போது சியா ஓரிடத்தில் திடீரென அமர்ந்துகொள்ள வேண்டும், அதுதான் சிக்னல் என்றும், உடனே கேத்தனை, காதலன் சேத்தன் தள்ளிவிட வேண்டும் என்று திட்டமிட்டு கொலையை செய்ததை இருவரும் நடித்துக் காட்டியிருக்கிறார்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.