பாகிஸ்தானில் போக்குவரத்து கட்டணங்கள் உயர்வு!
இஸ்லாமாபாத்: உலகளாவிய பெட்ரோல், டீசல் விலைகள் உயர்வால் கடும் பொருளாதார சிக்கலில் உள்ள பாகிஸ்தான், எரிப்பொருள்கள் மீதான விலையை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முழுவதும் பொது போக்குவரத்திற்கான பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
எரிபொருள் செலவு அதிகரித்ததே இந்த கட்டண உயர்வுக்கு காரணம் என்று பேருந்து நடத்துநர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறைந்தபட்ச பயணக் கட்டணம் (ஒரு நிறுத்தத்திலிருந்து அடுத்த நிறுத்தத்திற்கு) ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; அதேவேளையில் சரக்கு போக்குவரத்து கட்டணங்களும் கணிசமாக உயர்ந்துள்ளன.
கராச்சியில் இருந்து பெஷாவருக்குச் செல்லும் சரக்கு டிரெய்லர்களுக்கான கட்டணம் ரூ.7,00,000 ஆக உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வு, வணிகர்களிடையே புதிய பணவீக்க அழுத்தங்கள் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ராவல்பிண்டியில், உள்ளூர் போக்குவரத்து பயண கட்டணம் ரூ.20 ஆகவும்; அதேசமயம் சுற்றுப்புறப் பகுதிகளுக்குச் செல்லும் போக்குவரத்து கட்டணம் ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் தங்களோடு கொண்டு செல்லும் உடைமைகளுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளனர்.
மேலும், எட்டு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளுக்கும் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நீண்ட தூர பேருந்து சேவைகளில் பயணிப்பதற்கானபோக்குவரத்து கட்டணம் ரூ.100 முதல் 250 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ராவல்பிண்டி மற்றும் முர்ரி இடையே இயக்கப்படும் குளிர்சாதனை பேருந்து சேவைகளுக்கான கட்டணம் ரூ.700 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் ‘சிங்கி’ ரிக்ஷாக்கள், பைக் டாக்ஸிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன; அதேவேளையில் சரக்கு ஏற்றிச் செல்லும் ரிக்ஷாக்கள் தங்கள் சரக்குக் கட்டணத்தை ரூ. 500 ஆக உயர்த்தியுள்ளது.
நாட்டில் நிலவும் பணவீக்க அழுத்தங்களுக்கு மத்தியில், பயணிகளுக்கும் வணிகங்களுக்கும் கூடுதல் செலவுச் சுமையை ஏற்படுத்தியுள்ள பெட்ரோலியப் பொருள்களின் சமீபத்திய விலை உயர்வைத் தொடர்ந்தே இந்தக் கட்டண மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட திடீர் உயர்வு காரணமாக பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயரக்கூடும் என்ற தகவல்களைத் தொடர்ந்து இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பெட்ரோல் விலை ரூ.13, அதிவேக டீசல் விலை ரூ.14 ஆக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டதாக, வட்டார தகவல்களை மேற்கோள் காட்டி ‘ஏஆர்ஒய் நியூஸ்’ செய்தி வெளியிட்டிருந்தது.