;
Athirady Tamil News

இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள டெங்கு; தடுபூசி பெற கோரிக்கை!

0

டெங்கு தடுப்பூசியை இலங்கைக்குப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதி கோரி, கோரிக்கை படிவமொன்று அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

நாட்டில் டெங்கு பரவல் நிலைமை மற்றும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜூலையில் இதுவரை 26,136 டெங்கு நோயாளர்கள்
இந்த மாதத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் மட்டும் 26,136 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது இந்த ஆண்டில் ஒரு மாதத்தில் அடையாளம் காணப்பட்ட அதிகபட்ச டெங்கு நோயாளர் எண்ணிக்கையாகும்.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“டெங்கு நோய்க்கான தடுப்பூசியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோய் ஏற்படுவதற்கு முன்னர் இந்தத் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்வதன் மூலம் பாதுகாப்புப் பெற முடியும் எனக் கூறப்படுகிறது.

இதுவொரு புதிய தடுப்பூசி என்பதால், நோய் தடுப்பில் இது எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்று தற்போது கூறுவது கடினம். இருப்பினும், பல நாடுகள் இந்தத் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளன.

எனவே, இலங்கைக்கு இந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது” என்றும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நேற்றைய தினத்தில் புதிதாக 500 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டில் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,000-ஐத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இதுவரை மொத்தம் 82,011 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.