வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கிய ஆளுநரின் தீர்மானத்திற்கான இடைக்கால தடை நீடிப்பு: எழுத்து மூல சமர்ப்பணங்களை முன்வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவு!
வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கிய ஆளுநரின் தீர்மானத்தின் மீதான இடைக்கால தடைக்கட்டளை எதிர்வரும் செப்ரெம்பர் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன் விவாதங்களை எழுத்து மூல சமர்பணமாக வழங்குமாறும் வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று (07.08) உத்தரவிட்டுள்ளது.
வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை விண்ணப்பம் மீண்டும் ஒரு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இது தொடர்பாக வழக்கு தொடுநர் சார்பாக ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிகíகயில்,
ஆரம்ப கட்டத்தில் நாங்கள் எடுத்திருந்த இடைக்காலத் தடையினை நீக்குமாறு பிரதிவாதிகள் சார்பில் ஆட்சேபனை அணைக்கப்பட்டிருந்தது. அந்த ஆட்சேபனைக்கு நாங்கள் மறு ஆட்சேபனையினை வியாழக்கிழமை (06.08) அணைத்திருந்தோம். அந்த விடயம் தொடர்பாக மன்றில் விசாரணை நடைபெற்றது.
இடைக்காலத் தடையை நீடிப்பதா அல்லது அதனை விலக்குவதா என்பது சம்பந்தமாக மட்டுமே விவாதம் இடம்பெற்றிருக்கிறது. நாள் முழுவதும் இந்த விவாதம் இடம்பெற்று, இறுதியில் எங்களுடைய விவாதங்களினை எழுத்து மூல சமர்ப்பணமாக, மன்றுக்கு வழங்குமாறு மன்று பணித்திருக்கிறது.
அதனை இந்த மாதம் 28 ஆம் திகதி அன்று அல்லது அதற்கு முன்னதாக நாங்கள் அலுவலகத்திலே தாக்கல் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி இடைக்கால தடை தொடர்பான உத்தரவை நீதிமன்றம் வழங்கும். அதன் பின்னர் தான் பிரதான வழக்கு இடம்பெறும். அத்துடன் செப்டம்பர் 9 வரைக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கின்ற இடைக்காலத் தடைக்கட்டளை மன்றால் நீடிக்கப்பட்டிருக்கிறது என்றார்.