;
Athirady Tamil News

ஷேக் ஹசீனா உடன் காணொலி சந்திப்பு… ஷகிப் அல் ஹாசன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

0

வங்கதேச அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் எம்பியுமான ஷகிப் அல் ஹாசனின் பூர்வீக வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீச்சு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில், கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடு தழுவிய மாணவர்களின் போராட்டத்தின் விளைவாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்க்கப்பட்டது. பின்னர், இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனாவை வங்கதேச அரசு தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் தஞ்சடைந்து சுமார் 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், முதல்முறையாக ஷேக் ஹசீனா காணொலி வழியாக செய்தியாளா்களைச் சந்தித்து, “நான் வங்கதேசத்துக்கு நிச்சயம் திரும்புவேன். அங்கு நான் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம்” எனப் பேசினார்.

ஷேக் ஹசீனாவைப் போலவே ஷகிப் அல் ஹசனும் வெளிநாட்டில் தங்கியுள்ளார். ஷேக் ஹசீனா உடன் காணொலி வாயிலாகப் பங்கேற்ற இணையவழி நிகழ்ச்சியில் ஷகிப் அல் ஹாசனும் கலந்துகொண்டார்.

இந்த சந்திப்புக்கு அடுத்த சில மணி நேரங்களிலேயே அவரது வங்கதேச வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. கேஷப்மோர் பகுதியில் இருக்கும் ஷகிப் அல் ஹாசனின் பூர்விக வீட்டின் மீது புதன்கிழமை இரவு 8.45 மணியளவில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதனால், அந்த வீடு சேதமடைந்துள்ளது.

இது குறித்த விடியோவை வெளியிட்டுள்ள அவாமி லீக், “அவாமி லீக் ஆர்வளருக்கு எதிரான இந்தத் திட்டமிட்ட தாக்குதல் இனப்படுகொலைக்கான மற்றுமொரு ஏற்பாடாகும். மக்களாட்சி என்ற பெயரில் ஃபாசிசத்திற்கான அடையாளமாகவே இருக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

வங்கதேச கலவரத்தில் அமைச்சர்களின் வீடுகள் சூறையாடப்பட்டு, அமைச்சர்கள் சிலரை இளைஞர்கள் விரட்டி விரட்டி விரட்டித் தாக்கினர். அப்போது வெடித்த ஜென் ஸீ போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை காரணமாக 2,500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

நாட்டின் நிலைமை மோசமானதைத் தொடர்ந்தும், இளைஞர்களைக் கட்டுப்படுத்த முடியாத ஷேக் ஹசீனா, வங்கதேசத்தில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

அதனைத்தொடர்ந்து வங்கதேச ராணுவம் அதிகாரத்தை கையில் வந்தபிறகு வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, போராட்டம் முடிவுக்கு வந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.