புங்குடுதீவு இறுப்பிட்டி பகுதியில் பாரியளவிலான துப்பரவு பணி முன்னெடுப்பு
சுவிஸ் – புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினரால் புங்குடுதீவு பிரதேசத்தில் முன்னெடுத்து வருகின்ற “சுத்தமான புங்குடுதீவு” திட்டத்தின் இரண்டாவது செயற்பாடாக புங்குடுதீவு உலக மையம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க புங்குடுதீவு இறுப்பிட்டி ஐந்தாம் வட்டாரத்தில் அமைந்துள்ள சித்திவிநாயகர் மகா வித்தியாலம் வீதியில் இருபக்கமாகவும், அதனருகில் செல்கின்ற பெருக்குமரம் & கல்லடி அம்மன் வீதியின் ஒரு பக்கமும் சிரமதான செயற்பாட்டின் ஊடாக துப்பரவு செய்யப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்து – புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் நிதியுதவியில் புங்குடுதீவு உலக மையம் செயலாளர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் நான்கு தினங்களாக மேற்கொள்ளப்பட்ட மேற்படி துப்பரவு செயற்பாட்டில் உலக மையத்தின் நிர்வாக குழு உறுப்பினர்களான ராஜேந்திரன் கஜேந்திரன், கருணாகரன் நாவலன் மற்றும் பல பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டும், பெருக்கு மரம் மற்றும் கல்லடி அம்மன் கோவிலுக்கு பயணிக்கின்ற சுற்றுலாப்பயணிகள், அம்மன் அடியார்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் வகையிலும் குறித்த சிரமதான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
