;
Athirady Tamil News

காவடி எடுப்பது காட்டுமிராண்டித் தனமா?

0

காவடி எடுப்பது காட்டுமிராண்டித் தனமா?

இங்கிலாந்தில் இஸ்லாம் ஆண்கள் சுன்னத்துச் செய்யலாம். ஆனால் இஸ்லாம் பெண்களுக்கு சுன்னத்து செய்வது கிரிமினல் குற்றம். ஒரு பெண் குழந்தையை வெளிநாட்டுக்கு அழைத்துப் போய் சுன்னத்து செய்து விட்டு நாட்டுக்கு திரும்பினாலும் கிரிமினல் குற்றம்.
இந்த உதாரணம் ஏன் என்று பிறகு சொல்கிறேன்.

காட்டு மிராண்டி தனம் என்பதற்கான வரையறை என்ன ?

நான் மதத்தை நம்பாதவன். என் வீட்டில் சாமியறை இல்லை . நான் சாமி கும்பிடுவதே இல்லை .

அதற்காக நான் அறிவாளி , சாமி கும்பிடுபவன் எல்லாம் முட்டாளா ?
இல்லை.

அறிவியல் ஆராய்ச்சிகள் கூட சாமியை நம்புவது சாதாரண மனித இயல்புதான், அதைக் குறை சொல்லத் தேவையில்லை என்கிறது.

மதம் / சமயம் என்பது எப்போது காட்டுமிராண்டித் தனமாகிறது என்றால் அந்த மத நம்பிக்கை மற்றவர்களைப் பாதிக்கும் போது.

உதாரணமாக முருகனைக் கொண்டாடுவது காட்டுமிராண்டித் தனமல்ல.
ஆனால் முருகனுக்கு இரண்டு பொண்டாட்டி அதனால் எனக்கும் இரண்டு பொண்டாட்டி தேவை என்று ஒரே நேரத்தில் கட்டினால் அது காட்டுமிராண்டித் தனம்.

நபிகளை ஏற்றுக்கொள்வது சரி. ஆனால் அவர் குழந்தையைத் திருமணம் செய்ததால் இப்போதும் 10 வயது பிள்ளையை திருமணம் செய்ய அனுமதி தேவை என்று கேட்டால் அது காட்டுமிராண்டித்தனம்.

இந்தத் தெளிவோடு தான் நான் மதங்களை அனுகுவேன்.
அண்மையில், வைத்தியராக இருக்கும் நண்பனைச் சந்திக்க சென்ற போது மாட்டிறைச்சிக் கறி வாங்கி வரவா என்று கேட்டபோது , ” இல்லை மச்சான் மனிசி வீட்டுக்குள் மாட்டிறைச்சி எடுக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கு ” என்றான். அது சரி என்று ஏற்றுக்கொண்டேன்.

எனது வீட்டிலும் வருடத்திற்கு ஆறு மாதம் மாட்டிறைச்சி வாங்க மாட்டேன்.
ஆறுமாதம் மாமா , மாமி வந்து தங்கும்போது மாட்டிறைச்சி வாங்குவதில்லை. ஆனால் வெளியில் செல்லும் போதெல்லாம் மாட்டிறைச்சி சாப்பிடுவேன். அவர்கள் இல்லாத மற்ற ஆறு மாதங்களில் நான் வீட்டிலேயே மாட்டிறைச்சி சமைப்பேன். அவர்கள் இருக்கும் போது மாட்டிறைச்சி சமைத்தால்கூட அவர்கள் எதுவும் சொல்லப்போவதில்லை.
ஆனாலும் அவர்களுக்கு அது ஏதோவொரு அருவருப்பாக இருக்கலாம்.

இங்கே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி சாப்பிடாமல் இருப்பது காட்டு மிராண்டித் தனமல்ல.
ஆனால் மாட்டிறைச்சி , பன்றி இறைச்சி சாப்பிடுபவர்களை கேலி செய்து கொலை செய்யப் போகுமளவு சிந்திப்பது காட்டுமிராண்டித் தனம்.

உலகத்தில் இன்றும் அதிகமாக பன்றி இறைச்சியும் , மாட்டிறைச்சியும் சாப்பிடுபவர்களே பணம், அறிவியல் எல்லாவற்றிலும் உயர்ந்து உலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள் என்று அறிவது சாதாரண உலகறிவு.

இந்த வகையில் நோக்கினால் இந்தக் காவடி என்பது காட்டுமிராண்டித் தனமல்ல.
இந்த படம் எடுக்கப்பட்டிருக்கும் காவடி நடந்த இடத்தில் நானும் 20 நிமிடமளவில் நின்றிருந்தேன். இங்கிலாந்துக்கு வந்திருந்த ஒரு நண்பனின் உறவினர்கள் அங்கே நின்றதால் அவர்களைப் பார்க்க அவனை அங்கே அழைத்துச் சென்றிருந்தேன்.

காவடியை பல வெள்ளையினத்தவர்கள் பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தார்கள். படம் எடுத்தார்கள். அந்தக் கூட்டத்திடம் இந்த நிகழ்வுபற்றி விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இங்கிலாந்து பொலிஸ் வீதி பாதுகாப்பை ஒழுங்கு படுத்தி உதவிக் கொண்டிருந்தது.

இந்த நிகழ்வு நடந்த இடத்தை விட்டு வெளியேறும் போது ,” மொக்குச் சனம் என்று அந்த நிகழ்வை ஏற்பாடு செய்த கோயிலை நானும் நண்பனும் திட்டிக்கொண்டு வந்தோம்.”

காரணம் , நாங்கள் போகும் போதும் , திரும்பும் போதும் இந்தக் காவடி அதே சந்தியில் நின்றது. அதாவது அரை மணி நேரத்திற்கும் மேலாக அந்தச் சந்தி முற்றாக மூடப்பட்டு இருந்தது. பல சமூகங்கள் வாழும் இடத்தில் இவ்வாறு மணிக்கணக்கில் பாதையை மூடுவது காட்டு மிராண்டித் தனம்.

விரைவாக 10 நிமிடத்தில் சுற்றி வரும் வீதியில் சுத்தி வந்துவிட்டு , யாருக்கும் தொந்தரவு இல்லாமல் கோயிலுக்குள் நின்று மணிக்கணக்கில் காவடி ஆடினால் அது அவர்களின் நம்பிக்கை, மாறாக முட்டாள் தனமல்ல.

வெள்ளைக்காரனுக்கு இது பற்றி சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை
சுன்னத்து செய்வதை அனுமதித்தவன் ஏன் பெண்ணுறுப்பு சிதைவை அனுமதிக்கவில்லை.
பெண்ணுறுப்பு சுன்னத்து அந்த பெண்ணின் வாழ்வையே சீரழிக்கும் காட்டுமிராண்டித்தனம் என்று அதை கடுமையான சட்டம் மூலம் தடுக்கிறான்.

ஆனால் சுன்னத்து மூலம் ஒரு ஆணின் வாழ்க்கை அப்படி சீரழிவதில்லை என்பதால் சரி அது உங்கள் நம்பிக்கை என்று விட்டுவிடுகிறான்.

பெண்களின் சுன்னத்து ஏன் பிரச்சினை என்று கேட்பவர்களுக்கு , வேறு நாடுகளில் குழந்தைப் பருவத்தில் சுன்னத்து செய்யப்பட்ட பின் இங்கிலாந்து குடியேறிய பெண்களின் குழந்தை பிறப்பு சிக்கல் இல்லாமல் இருக்க இங்கிலாந்து அரசு செலவு செய்யும் பணத்தில் இலங்கையில் ஒரு மாவட்டத்தின் மருத்துவத் தேவையையே பூர்த்தி செய்யலாம். பெண்ணுறுப்பு சிதைவு அந்தளவு சிக்கலானது.

இந்தப் பறவைக் காவடி யாருக்கும் பாதகமில்லாமல் இருக்கும்வரை வெள்ளைக்காரனே நம்மோடு வந்து ஆடுவான்.
ஆனால் , அதுவே நேர்த்தி என்று ஒரு 15 வயதுப் பெடியனை கட்டாயப்படுத்தி ஆடவிட்டால் பொலிஸ் வந்து அம்மா அப்பாவை அழைத்துப் போகும்.
பிள்ளையை பெற்றோரிடமிருந்து பிரித்து எடுத்துவிடும் அரசு.

இவ்வளவுதான் விடயம் .

லண்டனில் இது நடந்த பிரதேசத்தில் இருந்த அநேகமான தமிழர்கள் இந்த நிகழ்வை தங்கள் வீட்டு நிகழ்வாக கொண்டாடினார்கள்.
அது காட்டுமிராண்டித் தனமல்ல.

அவர்களின் ஏதோ ஒரு பிரச்சினைக்கான வடிகால் அது.
அது காட்டு மிராண்டித் தனம் என்றால் நல்லூர் திருவிழாவுக்கு போகும் ஒவ்வொருவரும் காட்டு மிராண்டி . அதெல்லாம் வேண்டாம், வீட்டில் சாமிப்படம் வைத்து வணங்குவது கூட காட்டு மிராண்டித் தனமாக வந்து விடும்.

இன்னும் விளக்கமாக சொல்வதென்றால் எனது மகளுக்கு நமது கடவுள்களின் பெயரே தெரியாது.
அவளுக்கு தெரிந்த ஒரே கடவுள் யேசுநாதர். கத்தோலிக்கப் பாடசாலை என்பதால் யேசுநாதர் அறிமுகமானார். ஒரு நாள் என்னிடம் வந்து யேசுநாதர் நல்லவர்தானே என்று பேசத் தொடங்கினாள்.
உடனே நான் , ” வாணி நான் இந்துவாக பிறந்த ஆள், என் கடவுள் இது என்று உங்களை கட்டாயப் படுத்தவில்லை. காரணம் அறிவியல் ரீதியான அனுகும் பழக்கம் உள்ளவன் என்பதால் நான் கடவுளை நம்பவில்லை. நீங்கள் ஒரு கடவுளை நம்புவது உங்கள் இஷ்டம். அதை இன்னொருவரிடம் திணிப்பது தவறு.”
என்றேன்.

அதன்பின் இப்போது வளர்ந்து விட்டால் . கடவுள் பற்றி பெரிதாக பேசுவதில்லை.
மற்றவர்கள் கடவுளை வைத்து பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க ஆசைப்படுவார்கள்.
நாங்கள் அறிவியல் விளக்கம் , சாதாரண மனிதப் பண்பை வைத்து பிள்ளைக்கான ஒழுக்கத்தை சொல்லிக் கெடுக்கிறோம்.

இரண்டும் தவறு அல்ல.

என்பிள்ளை , சாமி கும்பிடும் பிள்ளையை பார்த்து முட்டாள் என்றால் தப்பு.
கடவுள் நம்பிக்கையுடன் வளரும் பிள்ளை தன் கடவுளை மட்டும் வணங்குபவர்கள்தான் சிறந்தவர்கள் மற்ற ஆட்கள் கெட்டவர்கள் என்று நினைத்தால் தப்பு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.