;
Athirady Tamil News

நல்லூரான் தேர் திருவிழா ; கந்தனை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள்

0

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை காலை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.

கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலய மகோற்சவம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை 6.15 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆறுமுக சுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளிக்கவுள்ளார்.

தேர்த்திருவிழாவை முன்னிட்டு இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழ் மக்களிடமிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் நல்லூரை நோக்கி வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறுமுக சுவாமியின் அருட்காட்சியை தரிசிப்பதற்காக பெருந்திரளான பக்தர்கள் ஒன்று கூடவுள்ளதுடன், காவடி எடுத்தல், அங்கப்பிரதட்சணம், கற்பூரச்சட்டி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களையும் பக்தர்கள் நிறைவேற்றவுள்ளனர்.

இதனையொட்டி நல்லூர் ஆலயச் சுற்றுப்புறங்களில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர்த்திருவிழா, இன்று காலை ஆயிரக்கணக்கான பக்தர்களின் பக்தி பரவசத்துக்கு மத்தியில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.