தகவல் அறியும் உரிமைக்கான சர்வதேச தினமான செப்ரெம்பர் 28 பிரகடனப்படுத்தப்பட்டதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு செயலமர்வு, யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன் தலைமையில் 25.09.2026 அன்று யாழ்ப்பாண மாவட்ட செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வானது அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான மாணவர்கள், அரசியல் விஞ்ஞான உயர்தர மாணவர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கிராமிய சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு அறியும் உரிமைச் சட்டம், அதனைப் பயன்படுத்தும் நடைமுறை மற்றும் குறித்தளிக்கப்பட்ட அலுவலர்கள் மற்றும் தகவல் அலுவலர்களின் பொறுப்புகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் இச் செயலமர்வு நடைபெற்றது.
இதன்போது கருத்துரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் , தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2016ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் நடைமுறையில் இருந்தபோதிலும், அதன் மூலம் பொதுமக்கள் தமக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் உரிமை தொடர்பில் மேலும் பரந்தளவிலான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.
பொதுமக்கள் அரச நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான சட்டபூர்வ உரிமையைக் கொண்டுள்ளதுடன், அவ்வுரிமையை பொறுப்புடனும் சரியான நோக்கத்துடனும் பயன்படுத்துவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரச நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நியாயமான நிர்வாகத்தை உறுதிப்படுத்துவதற்கு முக்கியமான கருவியாக விளங்குவதாகவும், அரச நிறுவனங்களின் செயற்பாடுகள், நிர்வாகத் தீர்மானங்கள், நியமனங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் உரிய தகவல்களைப் பெற்றுக்கொள்வதன் மூலம் தவறுகள் மற்றும் குறைபாடுகளை வெளிக்கொணரவும் சரிபார்க்கவும் முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும், தகவல் அறியும் உரிமை தொடர்பான விழிப்புணர்வு அரச உத்தியோகத்தர்களிடமும் பொதுமக்களிடமும் அதிகரிக்க வேண்டும் எனவும், தமது கடமைகளை முறையாகவும் வெளிப்படையாகவும் நிறைவேற்றுவதற்கும் இச்சட்டம் உத்தியோகத்தர்களுக்கு வழிகாட்டியாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக மாணவர்கள் தமது ஆய்வுப் பணிகளுக்காகவும், சமூக மட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தமது சமூக மற்றும் பொது நலத் தேவைகளுக்காகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி உரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறை, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள், குறித்தளிக்கப்பட்ட அலுவலர்கள் மற்றும் தகவல் அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. இச் செயலமர்வின் வளவாளராகக் கலந்துகொண்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களினால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நடைமுறைப் பயன்பாடு மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பான மேலதிக தகவல்களும் தெளிவுபடுத்தப்பட்டன.
தொடர்ந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் பங்கேற்பாளர்களினால் வினாக்கள் முன்வைக்கப்பட்டதுடன், அவற்றுக்கு வளவாளரினால் உரிய விளக்கங்களும் பதில்களும் வழங்கப்பட்டன.
இச் செயலமர்வில் உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி, மாவட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ம. சுகன்யா மற்றும் பி. பரணிகா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ற