இலங்கையின் 22 Mi-17 ஹெலிகொப்டர்கள் தொடர்பில் கீர்த்தி ரத்நாயக்க பரபரப்பு தகவல்
இலங்கையிடம் உள்ள 22 Mi-17 ஹெலிகொப்டர்களில் 19 பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும், மூன்று மட்டுமே தற்போது இயங்குவதாகவும் சுயாதீன புலனாய்வு ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இயங்கும் மூன்று ஹெலிகொப்டர்களில் ஒன்று VIP பயணங்களுக்காக பயன்படுத்தப்படுவதாகவும், மற்றொன்று ஐக்கிய நாடுகள் சபையின் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
VIP ஹெலிகொப்டரின் பறக்கும் நேரமும் முடிவடைந்துள்ளதாகவும், ஜனாதிபதி பயணிக்கும் ஹெலிகொப்டரின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பழுதடைந்த ஹெலிகொப்டர்களை திருத்துவதற்காக பல நிறுவனங்களிடமிருந்து முன்மொழிவுகள் பெறப்பட்டதாகவும், இறுதியில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவின் காலத்தில் முன்மொழியப்பட்டதாகக் கூறப்படும் ஒரு நிறுவனத்துக்கு பணியை வழங்க முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த நிறுவனம் தொடர்பில் பல நாடுகளில் தடைகள் இருப்பதாகவும், அதன் இலங்கை முகவராக ‘சகுரா டெக்’ நிறுவனம் செயற்படுவதாகவும் கீர்த்தி ரத்நாயக்க கூறினார்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான சுயாதீன உறுதிப்படுத்தல் குறித்த தகவலை அவர் நிகழ்ச்சியில் முன்வைக்கவில்லை. நான்கு ஹெலிகொப்டர்களை மாத்திரம் பழுதுபார்ப்பதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாகவும், பழுதுபார்க்கும் தொழிற்சாலை ஜோர்ஜியாவில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரஷ்யாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட உபகரணங்களை அமெரிக்காவுடன் நெருக்கமான உறவைக் கொண்டதாகக் கூறப்படும் ஜோர்ஜியாவுக்கு பழுதுபார்ப்பதற்காக அனுப்புவது தொடர்பில் ரஷ்யாவின் எதிர்ப்பு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக ஹெலிகொப்டர்களை பழுதுபார்க்கும் முயற்சி நிறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இவ்வாறான நடவடிக்கைகள் இலங்கையை சர்வதேச மோதலுக்குள் சிக்க வைக்கும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் கீர்த்தி ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்தார்.