யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த விசேட தொழிற்சந்தை, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (03.10.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துகொண்டார்.
இத் தொழிற்சந்தையின் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு பல்வேறு துறைகளில் காணப்படும் தொழில் வாய்ப்புகள் மற்றும் தொழிற்பயிற்சி வாய்ப்புகள் தொடர்பில் நேரடியாக அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இன்றைய தொழிற்சந்தையில் 1600 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டதுடன், 50 தொழில் வழங்கும் நிறுவனங்களும் 12 தொழிற்பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் பங்கேற்றன.
இதன்மூலம் தொழில் தேடும் இளைஞர்களையும் தொழில் வழங்கும் நிறுவனங்களையும் நேரடியாக இணைக்கும் முக்கிய தளமாக இந் நிகழ்வு அமைந்தது.
நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் பொ. சிறிவர்ணன், கணக்காளர் இ. முருகதாஸ், உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி, மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் கே. கருணாகரன், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.