;
Athirady Tamil News

பன்னாவில் மின்னிய அதிர்ஷ்டம்: ரூ.12 லட்சம் வைரங்களை அள்ளிய உ.பி. தம்பதி!

0

மத்திய பிரதேசத்தின் பன்னாவின் குத்தகைச் சுரங்கத்தில் தம்பதியினருக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான 4 வைரங்கள் கிடைத்தன.

உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியைச் சேர்ந்த ராஜ்குமார் ஸ்ரீவாஸ், குட்டி தேவி தம்பதி தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வந்தனர். அப்போது, மத்திய பிரதேச மாநிலத்தின் பன்னா மாவட்டத்தில் வைரங்கள் குறித்த தகவல்களை சமூக ஊடகங்கள் வாயிலாக அவர்கள் அறிந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, குட்டி தேவியின் தாய்வீடான பன்னாவுக்குக் குடிபெயர்ந்த தம்பதியினர், சர்கோஹா பகுதியில் சுரங்கப் பள்ளத்தை குத்தகைக்கு எடுத்து வைரங்களைத் தேடும் முயற்சியில் இறங்கினர். ஆறு மாத கால கடின உழைப்புக்கு அந்த தம்பதியினருக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் 4 வைரங்களை அவர்கள் கண்டெடுத்துள்ளனர். அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, இவற்றின் மொத்த எடை 5.16 காரட் ஆகும். இதன் மதிப்பு சுமார் ரூ. 12 லட்சம். வைர நிபுணர் அனுபம் சிங் மாவட்ட அலுவலகத்திற்கு நேரில் வந்து வைரங்களைப் பெற்று பாதுகாப்பாக வைப்பகத்தில் சேர்த்துள்ளார்.

இந்த வைரங்கள் விரைவில் அரசு நடத்தும் அதிகாரப்பூர்வ ஏலத்தில் விடப்படும் என்றும், அதிலிருந்து கிடைக்கும் நிகரத் தொகையில் இருந்து அரசின் வரிகள் போக மீதமுள்ள தொகை தம்பதியினருக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த எதிர்பாராத அதிர்ஷ்டம் தங்களது தொழிலை விரிவுபடுத்தவும், குழந்தைகளின் உயர்கல்விக்கு பெரிதும் உதவும் என்று தம்பதியினர் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.