;
Athirady Tamil News

எருமை மாடுகள் திருட்டு: இரு சந்தேகநபர்களும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு

0

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனையின் பேரில், பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.பி.எல். லக்சான் சமீர தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட எருமை மாடுகள் உள்ளிட்ட சான்றுப் பொருட்களுடன் நேற்று (05) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்மாந்துறைப் பகுதியில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட 12 எருமை மாடுகளில் 7 மாடுகள் மருதமுனைப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த நபருக்கு சொந்தமான குறித்த 12 எருமை மாடுகளும் கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி காணாமல் போயுள்ளதாகச் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்முறைப்பாட்டின் அடிப்படையில் சம்மாந்துறைப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட எருமை மாடுகள் மருதமுனைப் பகுதியில் இருப்பதாகப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்துச் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், 7 எருமை மாடுகளை மீட்டதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மருதமுனைப் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய சந்தேகநபரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், இத்திருட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாகச் செயற்பட்ட சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய மற்றுமொரு சந்தேகநபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மாடுகளை மீட்கும் நடவடிக்கைகளுடன், கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களிடமும் சம்மாந்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனரத்னவின் பணிப்புரையின் பேரிலும், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரிலும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிநடத்தலிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசாரின் நெறிப்படுத்தலிலும் பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.