;
Athirady Tamil News

விளக்கமறியலில் ஷிரந்தியின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல் ; உதவ வந்த பெண் அதிகாரியிடம் நடந்துகொண்ட விதத்தால் சர்ச்சை

0

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிரந்தி ராஜபக்ஷ, வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் உள்ள பாதுகாப்பான இடத்தில் அவர் தடுத்து வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.

மருத்துவச் சிகிச்சை
அரசுக்குச் சொந்தமான வங்கியொன்றில் பெறப்பட்ட 10 மில்லியன் ரூபா பணத்தைச் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (07) உத்தரவிட்டது.

அதேவேளை, மருத்துவச் சிகிச்சைக்காகச் சந்தேகநபரை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது நீதவான் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிரந்தி ராஜபக்ஷ, நேற்று பிற்பகல் சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை மெகசின் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டார்.

சிறைச்சாலை பேருந்தில் ஏற முற்பட்ட போது உதவிசெய்ய வந்த பெண் பொலிஸ் அதிகாரியின் கைகளை தட்டிவிட்டு ஏறி சென்றமை தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் அவருக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதென்ன குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவின் கணவரும், தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருமான பிரதீப் காரியவசம் என்பவரை பிணையில் விடுவிக்கவும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சந்தேகநபரான காரியவசம் தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.