;
Athirady Tamil News

இலங்கையில் காய்ந்த மிளகாய்க்குத் தட்டுப்பாடு அபாயம் ; சுங்கத்தில் 64 கொள்கலன்கள் தேக்கம்

0

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட காய்ந்த மிளகாய் அடங்கிய பல கொள்கலன்களுக்குரிய தரச்சான்றிதழ் அனுமதி கிடைக்காமையினால், அவற்றை விடுவிக்க முடியாமல் சுங்கப் பிரிவின் பொறுப்பில் உள்ளதாக சுங்கப் பணிப்பாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

காய்ந்த மிளகாய்த் தொகுதிகளை விடுவிப்பதற்கு உணவுப் பரிசோதனை அதிகாரசபை, தாவர தனிமைப்படுத்தல் சேவை மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களினதும் அனுமதி அத்தியாவசியம் என சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டுகின்றார்.

அந்த அனுமதிகள் இன்றி சுங்க முறைமை ஊடாகப் பொருட்களை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது காய்ந்த மிளகாய் அடங்கிய சுமார் 64 கொள்கலன்களை விடுவிக்க முடியாத நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவற்றுள் 33 கொள்கலன்களுக்கு தரநிர்ணய நிறுவனத்தின் அனுமதி கிடைக்கப்பெறாத அதேவேளை, மேலும் சுமார் 30 கொள்கலன்கள் அனுமதி கிடைக்கும் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இது தவிர, தரமற்றவை என உறுதிப்படுத்தப்பட்டு அழிப்பதற்கு உத்தரவிடப்பட்ட சில கொள்கலன்களும் அவற்றுள் அடங்கும்.

இவ்வாறு தேங்கிக்கிடக்கும் கொள்கலன்களுக்குள் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய, 9 இலட்சம் கிலோவிற்கும் அதிகமான காய்ந்த மிளகாய் காணப்படுவதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்களின் சங்கம் குறிப்பிடுகின்றது.

நிலவும் இந்த நிலைமையின் மத்தியில், எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் காய்ந்த மிளகாய்க்குப் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக மொத்த வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போதே புறக்கோட்டை மொத்தச் சந்தையில் ஒரு கிலோ காய்ந்த மிளகாய் விலை 1,600 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.