;
Athirady Tamil News

யாழ்ப்பாண மாவட்டக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விசேட நடவடிக்கை –   அமைச்சர் உறுதி

0
கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்நோக்கும் நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் அவற்றின் அபிவிருத்திக்கான தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து, தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களின் தலைமையில் விசேட கலந்துரையாடல் நேற்று (30.10.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்துதல், கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டறிதல் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளை முன்வைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்  கருணநாதன் இளங்குமரன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட இணைப்பாளர்  எஸ். கபிலன் ஆகியோர் பங்குபற்றினார்கள்.
வரவேற்புரை :
இக் கலந்துரையாடலில் கெளரவ அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் உள்ளிட்டவர்களை வரவேற்று, கூட்டுறவுத் துறை சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமைச்சர் அவர்களுடன் விசேட சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து தருவதாக வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாக இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் தேவைகளையும் நேரடியாக முன்வைத்து, அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கு இக்கலந்துரையாடலைப் பயன்படுத்திக்கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
  அமைச்சர் உரை :
கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், அவற்றின் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் அமைச்சு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகக் கௌரவ அமைச்சர் தெரிவித்தார்.
கூட்டுறவுச் சங்கங்கள் மாகாண மற்றும் மத்திய அரசாங்க நிர்வாகக் கட்டமைப்புகளின் கீழ் இயங்குகின்றபோதிலும், அமைச்சரினதும் பிரதி அமைச்சர்களினதும் வழிகாட்டுதலின் கீழ் அவற்றின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
கூட்டுறவுச் சங்கங்கள் செலுத்தும் SSL வரி தொடர்பான பிரச்சினைகள், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான தரகுப்பணத்தைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் சிக்கல்கள், கொள்வனவு மற்றும் விற்பனை நடவடிக்கைகளில் எதிர்நோக்கும் சவால்கள் ஆகியவற்றுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு மற்றும் நெல்லை உலர்த்துவதற்கான இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கு இவ்வாண்டு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்கீழ் 50 இயந்திரங்களைக் கொள்வனவு செய்து அடையாளம் காணப்பட்ட பயனாளிகளுக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
உற்பத்தி உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்காக மேலும் 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், 2025ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு இடையிலான தேசிய உற்பத்தித்திறன் போட்டியை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதில் வெற்றிபெறும் சங்கங்களுக்குப் பரிசுகள் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கூட்டுறவு மற்றும் கிராமிய வங்கிகளில் வைப்பிலிடப்பட்ட பணத்தை மீளப்பெறுவதில் வைப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், வைப்பாளர்களின் பணத்தைப் பாதுகாப்பாக மீள வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், விவசாயிகளின் உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதற்காகக் கொள்வனவு மத்திய நிலையங்களை உருவாக்குவதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தின் விவசாய உற்பத்திகளை மாத்தறை, குருநாகல் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இறுதியாக, பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றின் தேவைகள் தொடர்பான கோரிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறும், அவற்றுக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள் :
அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதி வசதிகள், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அங்கர் பால்மா விநியோக உரிமம் பெற்றுக்கொள்வதற்கான அனுமதி, சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு வரி (SSCL) தொடர்பான பிரச்சினைகள், உலர் உணவுப் பொருட்கள் விநியோகத்தில் கூட்டுறவுச் சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்குதல், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கான வங்கிக் கடன் வசதிகள், சங்கங்களின் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
அத்துடன், பனை, தென்னை அபிவிருத்திச் சங்கங்களின் வருடாந்த அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் சிக்கல்கள் மற்றும் அதற்கான கட்டண அதிகரிப்பு தொடர்பான பிரச்சினைகளும் கலந்துரையாடப்பட்டன.
இவ்விடயங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளைக் கவனத்தில் கொண்ட கெளரவ அமைச்சர் அவர்கள், அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளித்தார்.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்   க. சிவகரன், லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர்  கோசல, மாவட்டப் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்  எஸ். சிவகுமார், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், பனை, தென்னை அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.