;
Athirady Tamil News

எதிர்க்கட்சிகள் சட்டம் இயற்றினால், வீட்டோ அதிகாரத்தின் மூலம் ரத்து செய்வேன் – டிரம்ப்

0

வாஷிங்டன்,

எதிர்க்கட்சிகள் சட்டம் இயற்றினால், வீட்டோ அதிகாரத்தின் மூலம் ரத்து செய்வேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க நாடாளுமன்றம்
உலகின் மிகவும் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்கா, ஜனாதிபதி பதவிக்காக தனியாகவும், நாடாளுமன்றத்துக்காக தனியாகவும் தேர்தல் நடத்துகிறது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதி தேர்தலும், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்ற தேர்தலும் நடக்கிறது. இது இடைக்காலத் தேர்தல் என அழைக்கப்படுகிறது.

அமெரிக்க நாடாளுமன்றம் பிரதிநிதிகள் சபை (கீழ் சபை), செனட் சபை (மேல் சபை) என இரு அவைகளை கொண்டிருக்கிறது. இதில் பிரதிநிதிகள் சபையில் 435 உறுப்பினர்களும், செனட்டில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில் இருந்தும் தலா 2 பேர் வீதம் 100 பேரும் உள்ளனர்.

பிரதிநிதிகள் சபை உறுப்பினரின் பதவிக்காலம் 2 ஆண்டுகளும், செனட்டர் பதவிக்காலம் 6 ஆண்டுகளும் ஆகும். எனவே 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இடைக்காலத் தேர்தலில், பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட் சபையில் 3-ல் ஒரு பங்கு இடங்களுக்கும் தேர்தல் நடக்கிறது.

பலத்த போட்டி
அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியான டிரம்ப், கடந்த 2024-ம் ஆண்டு நவம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஜனவரியில் பதவியேற்றார்.

அவர் சுமார் 2 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிலையில், அமெரிக்க இடைக்கால தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட் சபையில் 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. மேலும் 36 மாகாண கவர்னர் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் என மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை அமெரிக்கா நடத்தியது.

இந்த தேர்தலில் டிரம்பின் குடியரசு கட்சி மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி இடையே பலத்த போட்டி காணப்பட்டது.

ஜனநாயக கட்சி அபாரம்
மிகவும் பரபரப்பாக நடந்த இடைக்கால தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. மக்கள் வாக்குச்சீட்டு மூலம் ஓட்டு போட்டனர்.

வாக்குப்பதிவு நிறைவடைந்த உடனே வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின. இதில் இந்திய நேரப்படி நேற்று காலை முதலே முடிவுகள் வெளியாக தொடங்கின.

இதில் தொடக்கம் முதலே எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் வெற்றிமுகம் காட்டினர். நேரம் செல்ல செல்ல அந்த கட்சியின் கையே முற்றிலும் ஓங்கியது.

இறுதியில் இரு அவைகளிலும் ஜனநாயக கட்சி பெரும்பான்மை பெற்றது. இதன் மூலம் இரு அவைகளிலும் குடியரசு கட்சியின் பிடி தளர்ந்தது.

நாடாளுமன்றத்தின் செனட் சபையில் 53-47 என்ற அடிப்படையில் பெரும்பான்மை வைத்திருந்த குடியரசு கட்சி, இந்த தேர்தலில் பல இடங்களை இழந்தது.

நேற்று மாலை நிலவரப்படி செனட் சபையில் ஜனநாயக கட்சி 53 இடங்களையும், குடியரசு கட்சி 42 இடங்களையும் வைத்திருந்தன. 5 இடங்களுக்கான வாக்குகள் எண்ணும் பணி நீடித்தது.

இதைப்போல 220-215 என்ற எண்ணிக்கையில் பிரதிநிதிகள் சபையையும் கைக்குள் வைத்திருந்த குடியரசு கட்சி, இந்த தேர்தலில் அதையும் இழந்தது.

கடைசியாக வெளியான நிலவரப்படி 223 இடங்களை ஜனநாயக கட்சியும், 131 இடங்களை குடியரசுக்கட்சியும் வென்றிருந்தன. 81 இடங்களுக்கான முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஆனது.

இதன் மூலம் இரு அவைகளின் கட்டுப்பாடும் முழுமையாக ஜனநாயக கட்சி வசம் சென்று விட்டன.

வீட்டோ அதிகாரம்
இதைப்போல கவர்னர் தேர்தலிலும் ஜனநாயக கட்சியினரின் கையே ஓங்கியது. தற்போதைய நிலையில் மொத்தமுள்ள 50 கவர்னர்களில் 28 பேர் ஜனநாயக கட்சியையும், 20 பேர் குடியரசு கட்சியையும் சேர்ந்தவர்களாக உள்ளனர். 2 இடங்களுக்கு முடிவு வெளியாவதில் தாமதம் நிலவியது.

அமெரிக்காவின் இந்த இடைக்கால தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் பலர் வெற்றி பெற்று இருந்தனர். இதைப்போல முதல் கருப்பின பெண் கவர்னர், முதல் முஸ்லிம் செனட்டர் என சில முதல் நிகழ்வுகளும் அரங்கேறி இருந்தன.

இடைக்கால தேர்தலில் டிரம்பின் குடியரசுக்கட்சி படுதோல்வி அடைந்திருப்பது அவருக்கும். அவரது கட்சியினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

எனினும் இந்த தேர்தல் முடிவுகளை ஏற்பதாக டிரம்ப் அறிவித்தார். வெற்றி பெற்ற ஜனநாயக கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்த அவர், நாட்டு நலனுக்காக இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

அதேநேரம் ஒத்துழைக்க மறுத்தால் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவேன் என மிரட்டலும் விடுத்திருந்தார். இதை தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு இருந்த அவர், அதை குறிக்கும் வகையில் வீட்டோ என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட தொப்பி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எச்சரித்து இருந்தார்.

டிரம்ப் ஆட்சிக்கு நெருக்கடி
மறுபுறம் டிரம்பின் இந்த தோல்வியை எதிர்க்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். ‘டிரம்ப் சகாப்தம் முடிந்தது’ என குடியரசு கட்சித்தலைவர்கள் சிலரும் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற இரு அவைகளையும் ஜனநாயக கட்சி கைப்பற்றி இருப்பதன் மூலம் டிரம்பின் எதேச்சதிகார செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டு உள்ளது.

ஏனெனில் அவரால் இனிமேல் எந்த புதிய சட்டத்தையும் தன்னிச்சையாக நிறைவேற்ற முடியாது. மாறாக நிறைவேற்று ஆணை மூலமே திட்டங்களை செயல்படுத்த முடியும். அதையும் கோர்ட்டு மூலம் ரத்து செய்ய எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

பட்ஜெட் நிறைவேற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திடம் இருப்பதால், ஜனநாயக கட்சியினரின் ஆதரவின்றி டிரம்பால் திட்டங்களுக்கு பணம் பெற முடியாது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மற்றும் உயர் அதிகாரிகளை நாடாளுமன்ற ஒப்புதல் இன்றி நியமிக்க முடியாது.

சர்வதேச வர்த்தகம், வரிவிதிப்பு போன்ற கொள்கைகளுக்கும், போர், வெளிநாட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கும் நாடாளுமன்றத்தால் முட்டுக்கட்டை போட முடி யும்.

இவ்வாறு எதிர்க்கட்சியால் டிரம்பின் ஆட்சிக்கு பெரும் நெருக்கடி கொடுக்க முடியும் என்பதால், அவரது அடுத்த 2 ஆண்டு பதவிக்காலம் பெரும் சோதனைக்களமாகவே அமையும் என சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.