;
Athirady Tamil News

செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக  உபதவிசாளர் போர்க்கொடி: கேள்விக்குள்ளாகும் கூட்டாச்சி..?

0

செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக  உபதவிசாளர் போர்க்கொடி: கேள்விக்குள்ளாகும் கூட்டாச்சி..?

செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளர் தன்னிச்சையாகச் செயல்படுவதைத் தவிர்த்து, அனைத்து உறுப்பினர்களையும் அரவணைத்துச் செல்லத் தவறினால் மேலதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ முறைப்பாடு செய்வதுடன், தேவைப்பட்டால் தனது உபதவிசாளர் பதவியிலிருந்தும் விலகப்போவதாக தமிழ் அரசு கட்சியின் செட்டிகுளம் பிரதேச கிளைத் தலைவரும், பிரதேச சபையின் உபதவிசாளருமான தேவசகாயம் சிவானந்தராசா (ஜெகன்) பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செட்டிகுளம் பிரதேச சபையின் ஏற்பாட்டில் ஆரம்பமாகியுள்ள தேசிய வாசிப்பு மாத நிகழ்வுக்கு வாழ்த்துத் தெரிவித்து, பிரதேச சபை நிர்வாகத்தின் தற்போதைய நிலைப்பாடு குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆரம்பமாகியுள்ள தேசிய வாசிப்பு மாத நிகழ்வு எமது மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதில் வெற்றிகரமாக அமைய எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தவிர்க்க முடியாத தனிப்பட்ட காரணங்களினால் இந்நிகழ்வில் என்னால் நேரடியாகக் கலந்துகொள்ள இயலவில்லை.

எமது பிரதேச சபையானது தனி ஒரு கட்சியின் வெற்றியினால் அமைக்கப்பட்ட ஆட்சி அல்ல. நாம் அனைவரும் ஒன்றிணைந்து, கூட்டு முயற்சியின் மூலமே தற்போதைய சபையின் பெரும்பான்மையை உருவாக்கினோம். உபதவிசாளர் பதவி என்பது சபையின் இரண்டாம் நிலை மக்கள் பிரதிநிதித்துவப் பதவியாகும். எனவே, பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் நிர்வாக முடிவுகளும் தவிசாளருடன் மட்டுமல்லாது, உபதவிசாளராகிய என்னுடனும் கலந்தாலோசிக்கப்பட்டு ஒருமித்த கருத்துடனேயே முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதேபோன்று, எமது பிரதேசத்தின் பிரதிநிதிகளாகவும் மக்களின் நல்வாழ்வுக்காகத் தொடர்ந்தும் உழைப்பவர்களாகவும் உள்ள அனைத்து கௌரவ உறுப்பினர்களது உரிமைகளும் கௌரவமும் சபையின் தலைமைத்துவத்தினால் எப்போதும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்.”

“வெளிப்பார்வைக்கு எமது சபை ஒற்றுமையின் சிகரமாக விளங்கினாலும், உள்ளுக்குள் பல பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. அவை வெளியாருக்குத் தெரியாத வண்ணம் இதுவரை நாம் பொறுமையுடனும் விட்டுக்கொடுப்புடனும் சமாளித்து வந்தோம். ஆனால், எங்களது இந்த பொறுமையையும் நெகிழ்வுத்தன்மையையும் சாதகமாகப் பயன்படுத்தி, என்னையோ அல்லது ஏனைய கௌரவ உறுப்பினர்களையோ தொடர்ந்தும் கட்டுப்படுத்தி வைக்க முடியாது.

அனைவரையும் அரவணைத்துச் செல்லாமல் தவிசாளர் ஒரு சிலருடன் மாத்திரம் தனிப்பட்ட முறையில் பயணிப்பதும், எமது வட்டாரப் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து எமக்குத் தெரிவிக்காமல் மறைப்பதும், உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் வேலைத்திட்டங்களைத் தாமதப்படுத்துவதும் எமது கூட்டு ஆட்சி முறைக்குச் செய்யப்படும் அவமரியாதையாகவே பார்க்க வேண்டியுள்ளது.

பலமுறை இதனை சகித்துக்கொண்டு சென்றபோதிலும், எமது சுயமரியாதையையும் மக்களின் உரிமைகளையும் அடகு வைத்துவிட்டு எம்மால் மௌனமாக இருக்க முடியாது.”

“தவிசாளர் தனது தன்னிச்சையான செயற்பாடுகளை உடனடியாக மாற்றிக்கொண்டு, அனைத்து உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படத் தவறினால், எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் மிகக் கடுமையாக இருக்கும்.

இது தொடர்பாக மாகாண உள்ளூராட்சி சபையின் மேலதிகாரிகளுக்கும், துறைசார் அரசியல் தலைமைத்துவங்களுக்கும் எமது உத்தியோகபூர்வ முறைப்பாடுகளைக் கொண்டுசெல்வோம். 

தேவைப்பட்டால், மக்கள் நலனுக்காகவும் சுயமரியாதைக்காகவும் இந்த உபதவிசாளர் பதவியிலிருந்து விலகுவதற்கும் நான் தயங்கமாட்டேன் என்பதை மிகவும் கவலையுடனும் உறுதியாகவும் தெரிவித்துக்கொள்கிறேன். மக்களின் உரிமைகளுக்காக எமது குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்கும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செட்டிகுளம் பிரதேச சபையில் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக தேசிய கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஆட்சி செய்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.